சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு... இது வெறும் பாடல் வரிகள் மட்டுமில்லீங்க. இது வாழ்க்கையின் எளிமையான தத்துவம்.


எனக்குத் தெரிந்த தோழியின் மகள் ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். அவளின் அம்மா பள்ளி வாசலில் இறக்கிவிட்டதுமே அங்கிருக்கும் வாட்ச்மேன் அண்ணனைப் பார்த்து குட் மார்னிங் அண்ணா என்று சொல்வாள். அவளின் குட்மார்னிங் அந்த வாட்ச்மேன் அண்ணனை அவ்வளவு மகிச்சியடையச் செய்யும். ஒரு நாள் தோழியின் மகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் அடுத்த நாள் தோழி மகளை இறக்கிவிடும்போது என்னங்கம்மா பாப்பா ஏன் நேத்து வரல என்று பாசமாக விசாரித்துவிடுவாராம்.


அவரவர் வேலையை அவரவர் பார்க்கும் அலுவலகமாக இருந்தாலும் கூட சின்ன சின்ன அக்கறையான செயல் மூலம் அன்பைப் பரப்பிக் கொண்டே இருக்கலாம். உதாரணத்துக்கு நாம் டீ குடிக்கச் செல்லும் போது நம் பக்கத்து சீட்டில் இருக்கும் நபர் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தால் அவருக்கும் ஒரு கப் டீ சேர்த்து எடுத்து வரலாம். அவ்வளவுதாங்க.. அதுதாங்க சின்னச் சின்ன அன்பு. இது இல்லைனா மனிதன் இயந்திரமாகிவிடுவான். 


பல கேட்ஜெட்டுகள் இன்று நம்மை இயந்திரமாக்கிக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் செல்ஃபோனில் மூழ்கும் காலத்தில் பிறர் மீது சின்னச் சின்ன பிரதிபலன் எதிர்பாராத அன்பைக் காட்டுவது கூட அநாவசியம் என்று நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது.


அதனால் தான் அத்தகைய அன்பு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்த கதைகளும், படங்களும், வீடியோக்களும் தேவையாக இருக்கின்றன.


இந்தக் கட்டுரையில் நாம் பேசும் வீடியோ 2013ல் வெளியானது தான் ஆனாலும், காலம் கடந்து நிற்கக் கூடியது. 
நீங்கள் யார் மீதாவது சின்னதாக அன்பு காட்டினால் போதும்.. உங்களுக்கு அன்பு திரும்பக் கிடைக்கும் இதுதான் இந்த வீடியோவின் சாராம்சம்.


நம்மிடம் பணம், வீடு, வாகனம், இன்னும் பல வசதிகள் இருக்கலாம் ஆனால் நம்மிடம் பாசமாக, நேசமாக உண்மையான அன்போடு பழக ஆளில்லை என்றால் நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்காது. மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனது வாழ்க்கை அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மற்றவர்களைச் சார்ந்து தான் அமைய வேண்டும். அதில் அன்பு தான் இணைப்புப் பாலம். அந்த அன்பை போதிக்கும் வீடியோவைப் பாருங்களேன்..


இதோ லிங்க்: https://www.youtube.com/watch?v=PT-HBl2TVtI&t=145s


என்ன வீடியோவைப் பார்த்துவிட்டீர்களா இப்போது புரிகிறதா சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு... என்று. வெறுப்பை அல்ல அன்பைப் பரப்புவோம்.