கடந்த 2021ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ராணுவத்திற்காக சுமார் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகை செலவிட்டிருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக வரலாற்றிலேயே ராணுவத்திற்காக இத்தனை பெரிய தொகை செலவிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. 


 ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2021ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் ராணுவத்திற்காக செலவிடப்படும் மொத்த தொகையில் சுமார் 0.7 சதவிகிதம் உயர்வு கண்டறியப்பட்டுள்ளது. 


கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனா, இந்தியா, யு.கே, ரஷ்யா ஆகிய நாடுகள் ராணுவத்திற்கு அதிக தொகையை செலவு செய்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்த 5 நாடுகள் தங்கள் ராணுவங்களுக்காக மேற்கொண்டிருக்கும் மொத்த செலவு உலகம் முழுவதும் ராணுவத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவுத் தொகையில் சுமார் 62 சதவிகிதம் உள்ளன. 



ராணுவத்திற்காக அதிக பணத்தை செலவு செய்த டாப் 5 நாடுகளின் பட்டியல் இதோ... 


1. அமெரிக்கா: 


கடந்த 2020ஆம் ஆண்டின் கணக்கோடு ஒப்பிடுகையில், கடந்த 2021ஆம் ஆண்டு ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் சுமார் 1.4 சதவிகிதத் தொகையைக் குறைத்திருந்தாலும், சுமார் 801 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்திற்காக செலவு செய்து, உலகிலேயே ராணுவத்திற்காக அதிக தொகை செலவு  செய்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது அமெரிக்கா. கூடுதலாக அமெரிக்க அரசு ராணுவம் சார்ந்த ஆய்வுகளுக்கும், மேம்பாடுகளுக்கும் சுமார் 24 சதவிகிதம் தொகையை அதிகரித்திருப்பதோடு, ராணுவத்திற்காக வாங்கப்படும் ஆயுதங்களின் மீதான தொகையை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் 6.4 சதவிகிதம் வரை படிப்படியாக குறைத்துள்ளது.  


2. சீனா:


கடந்த 2020ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 4.7 சதவிகிதம் ராணுவத்திற்கான செலவை அதிகரித்துள்ள சீனா, கடந்த 2021ஆம் ஆண்டு சுமார் 293 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்திற்காக செலவு செய்துள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக சீனாவின் ராணுவத்திற்கான செலவு அதிகரித்து வருவதோடு, ஆசியாவிலேயே மிகப்பெரிய படையை சீனா வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


3. இந்தியா:


சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றான இந்தியா கடந்த 2021ஆம் ஆண்டு சுமார் 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்திற்காக ஒதுக்கியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 0.9 சதவிகித நிதி அதிகரிப்பையும், கடந்த 2012ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 33 சதவிகித நிதி அதிகரிப்பையும் மேற்கொண்டுள்ளது இந்திய அரசு. உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு, ராணுவத்திற்கான பட்ஜெட்டில் சுமார் 64 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 



4. பிரிட்டன்


கடந்த 2020ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 3 சதவிகித உயர்வோடு, கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு ராணுவத்திற்காக சுமார் 68.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஐரோப்பாவில் உக்ரைன் நாட்டில் போர்ச் சூழல் உருவாகியுள்ளதால், வரும் ஆண்டு பிரிட்டன் அரசு ராணுவத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


5. ரஷ்யா


சுமார் 65.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்திற்காக செலவு செய்துள்ளது ரஷ்யா. இது கடந்த 2020ஆம் ஆண்டை விட சுமார் 2.9 சதவிகிதம் அதிகம் ஆகும். மேலும் கடந்த 2016 முதல் 2019 வரை, எரிபொருள் விலைச் சரிவின் காரணமாக ரஷ்ய அரசு ராணுவத்திற்கான செலவைக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.