சமீபத்தில் வெளியான கேஜிஎப் படத்தில் நான் இந்தியாவின் CEO என ராக்கிபாய் கூறுவது படத்தின் ஹைலைட். யஷ் ரீல் ராக்கிபாய் என்றால் ரியல் ராக்கிபாயாக உருவாகி வரும் பிஸினஸ் மேன் எலான் மஸ்க். அவர் திட்டம் எல்லாம் உலகத்தின் CEO ஆகிவிடலாம் என்பதாகவே இருக்கிறது. இது வெறும் பில்டப் அல்ல. அவரின் செயல்பாடுகளை உற்று நோக்கினால் ஏதோ ப்ளான் செய்கிறார் என்பது நிச்சயம் புரியும். ஏனென்றால் காரை தயாரித்துக்கொண்டு இன்றைய தேதிக்கு மட்டுமே அவர் யோசிக்கவில்லை, டெஸ்லா போட் என்ற எதிர்காலத்துக்கான ரோபோவையும் உருவாக்குகிறார். பூமிக்கு மட்டுமே அவர் சிந்திக்கவில்லை, செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் செல்வது குறித்து ப்ளான் செய்கிறார். 


டெஸ்லா என்ற கார் நிறுவனத்தின் ஓனர் என்ற தொடக்கப்புள்ளியிலேயே நமக்கெல்லாம் எலான் மஸ்க் அறிமுகம். உலகில் எத்தனையோ கார் நிறுவனங்கள் உள்ளன. அனைத்துக்கும் ஓனர் உண்டு. ஆனால் எலான் மஸ்க் வெறும் கார் கம்பெனியின் ஓனர் அல்ல. அவரது திட்டம் அடுத்து.. அடுத்து.. என மேலே மேலே சென்றுகொண்டே இருக்கிறது. 


டெஸ்லா..




டெஸ்லா நிறுவனம் 2008ம் ஆண்டு எலன் மஸ்க் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக தானியங்கி கார் தயாரிப்பில் வெகு பிரபலமாகி வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சமாக தானியங்கி வாகனங்கள் பார்க்கப்படுகிறது. விமானம், கப்பல், ரயில் போன்ற பல போக்குவரத்துக்கு வாகனங்கள் பல ஆண்டுகளாக தானியங்கி முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களின் அன்றாட பயன்பாட்டில் இந்த தானியங்கி கார்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதில் தானியங்கி கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னோடியாகவே திகழ்கிறது. தானியங்கி, எலக்ட்ரிக் என இரண்டையும் ஒருசேர தயாரிக்கும் டெஸ்லா, எதிர்காலத்தை நோக்கியே பயணித்து வருகிறது.


பிட்காயின்..




எலான் மஸ்க் தன்னுடைய முதலீட்டுக்கு மெய் நிகர் நாணயம் எனப்படும் பிட்காயினை அறிமுகம் செய்திருந்தார். ஆரம்ப காலத்தில் முதலீட்டாளர்கள் அனைவரும் பேசும் பொருளாக  தன்னுடைய அறிவிப்பினை எலான் மஸ்க் வெளியிட்டிருந்தார். அதன்படி தங்கள் நிறுவனத்தின் பொருள்களை வாங்கவேண்டும் என்றால் இந்த மெய் நிகர் நாணயமான பிட்காயினை பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தார். அதனையடுத்து அதிகளவில் மக்கள் பயன்படுத்தியதால் டெஸ்லா நிறுவனத்தின் பொருள்கள் எல்லாம் தாறுமாறாக உயர்ந்தது. மேலும் இதன் காரணமாக பிட்காயின் மதிப்பும் சந்தையில் அதிகரிக்க தொடங்கியது. 


இந்த அறிவிப்பை வெளியிட்ட சில காலங்களிலேயே, டெஸ்லா நிறுவனத்தில் பொருட்கள் வாங்க பிட்கானை பயன்படுத்தமுடியாது எனவும், பிட்காய்ன் ஏற்கப்படாது எனவும் ட்விட்டரில் அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில், பிட்காயினின் மதிப்பு சந்தையில் குறைந்தது.


ஸ்பேஸ் எக்ஸ்..




செப்டம்பர் 16ம் தேதி 2021ம் ஆண்டு இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.32 மணிக்கு ஃபால்கான் ராக்கெட் நான்கு அமெரிக்க சுற்றுலாப்பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் முதல்கட்ட திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தில் விண்வெளிக்கு பயணம் செய்தனர். எதிர்காலத்தில் பூமியில் மட்டுமே மனிதர்கள் இருக்க முடியாது. நாமெல்லாம் செவ்வாய் கிரகத்துக்கும் செல்ல வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கும் எலான் மஸ்க் அதற்கான வேலையில் தீவிரமாக இருக்கிறார் என்பதை காட்டியது ஸ்பேஸ் எக்ஸ்.


டெஸ்லா ரோபோ..




எந்திரன் படத்தில் வரும் ரோபோவைப் போல டெஸ்லா இப்போது ரோபோ தயாரிப்பில் இறங்கியுள்ளது. டெஸ்லா போட் என்று அழைக்கப்படும் ரோபோவின் கான்செப்டை டெஸ்லா ஏஐ டே விழாவில் அறிமுகப்படுத்தி பேசினார் டெஸ்லாவின் நிறுவனர் மஸ்க். அதில், ''கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்ற மனிதர்களுக்கு சலிப்பு தரக்கூடிய வேலைகளை இந்த ரோபோ செய்யும். எதிர்காலத்தில் உடல் உழைப்பு என்பது உங்களுக்கான சாய்ஸாகவே இருக்கும். ஒரு வேலையை நீங்கள் செய்ய நினைத்தால் செய்யலாம். ஆனால் அதை நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதும், அதற்கு ஹுயூமனாய்ட் ரோபோக்கள் பெரும் அளவில் கைகொடுக்கும் என்பதை தீர்க்கமாக நம்புகிறார் மஸ்க்.


ட்விட்டர்..




ஏதேதோ பிஸினஸ் என்றாலும் எப்போதும் ட்விட்டரில் கலகலவென எதையாவது பேசிக்கொண்டிருக்கும் எலான் தற்போது அதற்கும் ஓனராகிவிட்டார். எடிட் பட்டன் இல்லை, நிறைய எழுத முடியவில்லை என குற்றம்சாட்டிய எலான், தற்போது ட்விட்டரையே விலைக்கு வாங்கி இனி எல்லாம் சரியாகும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்தையும் பிஸினஸ் பார்வையில்  பார்க்கும் எலான்,  ட்விட்டரை மட்டும் வெறும் பொழுதுபோக்குக்காக வாங்கி இருக்க மாட்டார் என்பதே தொழில் புரிந்தவர்களின் கணக்கு. ஏதோ ப்ளானுடன்தான் சோஷியல் மீடியாவில் கால்பதித்துள்ளார் எலன் என்றும், அனைத்து துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் எலான் உலகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கவே திட்டமிடுகிறாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது சோஷியல் மீடியா உலகம்.