பரபரப்பான கட்டத்திற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கேள்வி அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 


இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தும் வரும் நிலையில், இலங்கையுடனான இந்திய உறவு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ராஜபக்ச குடும்பம் சீனாவிற்கு ஆதரவான போக்கை எடுத்து வந்ததாக உலக அரங்கில் பேசப்பட்டாலும், இலங்கையுடன் இந்தியா நல்லுறவையே பேணி வருகிறது. 




இலங்கையுடைய பொருளாதாரம் ஒவ்வொரு விதமாக விழுந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சீனா ஏறக்குறைய 67 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே இந்தியா 376 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இலங்கைக்கு கடனாக வாரி வழங்கி இருக்கிறது. இந்த பணம்  ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. 


இச்சூழலில்தான், இலங்கையில் அடுத்த அதிபர் தேர்வு இன்று செய்யப்பட உள்ளார். அதிபர் தேர்தலுக்கான போட்டியில் மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் துலாஸ் அலகபெருமவுக்கும் ரணிலுக்கும்தான் போட்டி என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லாத போதிலும், ராஜபக்ச கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவரின் போட்டி வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ள துலாஸ் அலகபெருமவுக்கு சஜித் ஆதரவு தெரிவிருப்பது அவருக்கு பலமாக கருதப்படுகிறது. 


இந்நிலையில், அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படும் ரணில் மற்றும் துலாஸ் அலகபெரும குறித்து கீழே காண்போம்.


இந்தியாவுக்கு 'நெருக்கமான' ரணில் விக்கிரமசிங்க..


73 வயதான ரணில் விக்ரமசிங்க சுமார் 45 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட கூடிய தலைவராக ரணில் திகழ்கிறார்.


வசதியான அரசியல் குடும்பத்தில் பிறந்த ரணில் விக்கிரமசிங்க தொழில் ரீதியாக வழக்கறிஞர் ஆவார். 1977 இல் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ல் ரணசிங்க பிரேமதாச அதிபராக இருந்தபோது அரசியல் அடுத்த கட்டத்திற்கு சென்றார். 1993 இல் பிரேமதாஸ் படுகொலை செய்யப்பட்டு டி.பி. விஜேதுங்க அதிபராக பதவியேற்றபோது ரணில் முதல் முறையாக பிரதமரானார்.


1994 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் காமினி திசாநாயக்க படுகொலை செய்யப்பட்டபோது அக்கட்சியின் தலைவரானார். 2005ஆம் ஆண்டு, இலங்கை அதிபர் பதவிக்கு விக்கிரமசிங்க போட்டியிட்ட போது, ​​மஹிந்த ராஜபக்சவிடம் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.




2010இல், அவர் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அதிபர் பதவி தேர்தலில் ஆதரித்தார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.


2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்ட போது, விக்கிரமசிங்க உலகளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அவருக்கும் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு, உளவுத்துறையின் தோல்விக்குக் காரணமாக மாறி, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வரை இட்டு சென்றதாக கூறப்படுகிறது.


மத்திய வங்கியின் தலைவராக தனது நண்பரை ரணில் நியமித்ததாகவும் உள்நாட்டு வர்த்தக குற்றச்சாட்டில் அவர் சிக்கியபோது நண்பருக்கு ஆதரவாக செயலப்பட்டதாகவும் ரணில் மீது குற்றச்சாட்டு உள்ளது.


2018ல் பிரதமர் பதவியில் இருந்து அவரை நீக்க முயன்ற அவருக்கும் சிறிசேனாவுக்கும் இடையேயான உறவில் இது விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, மகிந்த ராஜபக்ச 52 நாட்களுக்கு பிரதமராக பதவியேற்றார். இது அரசியலைப்புக்கு எதிரான செயல் என விமர்சிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். விக்கிரமசிங்க இந்தியாவுடன் நெருக்கமாக கருதப்படுகிறார்.


சவால் தரும் துலாஸ் அலகபெரும 


நாடாளுமன்ற உறுப்பினரான துலாஸ் அலகபெரும தொடக்க காலத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி உள்ளார். 1994 இல் முதல்முறையாக அமைச்சராக பொறுப்பு ஏற்றார். 1993 மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வெகுஜன ஊடக அமைச்சராகவும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகித்தார். கலாசார விவகாரங்களுக்கான மாகாண அமைச்சராகவும் பணியாற்றினார்.


தீவிர அரசியலில் சேருவதற்கு முன்னர், அழகப்பெருமா தீவிர சிங்கள சிற்றிதழ்களான லக்திவ மற்றும் லக்மினாவில் பணியாற்றினார். பாடகி பிரதீபா தரமதாசவை திருமணம் செய்து கொண்டார். 2008 ஆம் ஆண்டு இலங்கை செய்தி நிறுவனமான சண்டே ஒப்சர்வருக்கு பிரதீபா அளித்த பேட்டியில் அரசியல்வாதி அழகப்பெருமாவை விட ஊடகவியலாளர் அழகப்பெருமவை தான் விரும்புவதாக கூறினார்.




2016 ஆம் ஆண்டு முதல் தென்னிலங்கையின் மாத்தறை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வருகிறார். ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமாக கருதப்படுகிறார். ஆனால், அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமான போது, ராஜபக்சே ஏப்ரல் மாதம் அமைச்சரவையை கலைத்தபோது, தனது பதவியை அவரும் ராஜினாமா செய்தார்.


பொருளாதார வீழ்ச்சியினால் எதிர்கொள்ளும் இன்னல்களில் இருந்து இலங்கை மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது என அழகப்பெரும நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் ஜனநாயக அரசியலமைப்பு அரசியல் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.


முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ்தான், அழகப்பெருமவை அதிபர் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை (SLPP) முதலில் வலியுறுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க SLPP கட்சி ஆரம்பத்தில் முடிவு செய்தது. ஆனால் அக்கட்சிக்குள் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு இருந்தது.


இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில்தான், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகி அழகப்பெருமவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.