வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை தேடி சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கப்பலில் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர்.


மாயமான நீர்மூழ்கி கப்பல்:


நீர்மூழ்கி கப்பலை இயக்கிய ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் தொழிலதிபர் ஷாஷாதா, அவரது மகன் சுலேமான் தாவூத், டைட்டானிக் கப்பல் பற்றி ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டின் கடற்படை வீரர் பால் ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் காணாமல் போன கப்பலில் இருந்துள்ளனர்.


அந்த கப்பல் மாயமவதற்கு முன்பாகவே, கப்பலின் பாதுகாப்பு குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, கனடா நியூபவுண்ட்லாந்திலிருந்து நீர்மூழ்கி கப்பல் புறப்பட்டுள்ளது. கிளம்பிய 1 மணி நேரம் 45 நிமிடத்தில் கப்பலின் சிக்னல் கட்டாகியுள்ளது.


இதை தொடர்ந்து, நீர்மூழ்கி கப்பலை கண்டிபிடிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது, மீட்பு நடவடிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நீர்மூழ்கி கப்பலில் பயணிகள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் அளவு, இன்னும் 1 மணி நேரத்திற்கே மட்டுமே உள்ளது.


குறைந்து வரும் ஆக்ஸிஜன் அளவு:


அவசரகாலத்தில் 96 மணிநேரம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் வகையில் நீர்மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்மூழ்கி கப்பல் தொலைந்து போன இடத்திற்கு பல்வேறு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆழ்கடலில் இருந்து வரும் சத்தத்தின் மூலம் கப்பலை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. 


இதுகுறித்து ஆழ்கடல் ஆய்வாளர் டாக்டர் டேவிட் காலோ கூறுகையில், "நீருக்கடியில் மீண்டும் மீண்டும் வரும் சத்தங்கள் சென்சார்கள் கொண்ட மூன்று வெவ்வேறு விமானங்களால் இரண்டு நாட்களுக்கு மேல் கேட்கப்பட்டன" என்றார்.


ஆழ்கடலில் இருந்து வரும் சத்தம், அனைத்து இடத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை குறைத்து, எங்கு தேட வேண்டும் என்பதை துல்லியமாக கணித்தாலும், அவற்றின் சரியான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி கூறியுள்ளார். அதேபோல, நீர்மூழ்கி கப்பலில் குறைந்த அளவிலான உணவு பொருள்களே மீதம் இருப்பது பயணிகளுக்கு சவாலாக உள்ளது.


இறுதி நொடிகளை எண்ணும் பயணிகள்:


இதுகுறித்து ஆக்ஸிஜன் நிபுணர் டாக்டர் கென் லெடெஸ் கூறுகையில், "காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சிலர் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் உயிர்வாழ முடியும். நீரில் மூழ்கும் பயணிகள் எவ்வளவு குளிராக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஆக்ஸிஜனின் பயன்பாடு மாறுபடும். ஏனெனில் நடுக்கம் அதிக ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. கட்டிப்பிடிப்பது வெப்பத்தைப் பாதுகாக்க உதவும்" என்றார்.