பொது ஒழுக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வகையில் டிட் டாக்கில் வீடியோ பதிவிட்ட டிக் டாக் பிரபலம் ஹனின் கொசாமுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 லட்சம் எகிப்தியன் பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
டிக் டாக் மூலம் எகிப்தில் பிரபலமானவர் ஹனின் கொசாம். மில்லியன் கணக்கில் தனக்கு இருந்த ஃபாலோவர்களை பணமாக மாற்ற நினைத்த ஹனின் சில வழிகளை கையாண்டுள்ளார். தன்னுடன் இணைந்து பணியாற்றினால் பணம் சம்பாதிக்கலாம் என்பது போன்ற வீடியோவை ஹனின் கொசாம் கடந்த ஆண்டே வெளியிட்டுள்ளார். கவர்ச்சியை மையப்படுத்தி மேலும் இளம்பெண்களை கவரும் விதமாகவும் அவர் விளம்பரங்களை பதிவிட்டு தன்னுடைய ஃபாலோவர்களை ஏமாற்றியுள்ளார். லைவ் வீடியோக்கள், புதுப்புது அறிமுகம், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற பல வியூகங்களை வகுத்து சோஷியல் மீடியாவில் காசு பார்த்துள்ளார் ஹனின்.
இது நாட்டின் சட்டத்துக்குப் புறம்பானது எனக் கூறி அவரை கைது செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், 2 லட்சம் எகிப்தியன் பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லைக் என்ற செயலியை ஹனின் ஊக்குவித்ததாகவும் அந்த செயலிக்கு தொடர்ந்து விளம்பரம் செய்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. லைக் என்பது டேட்டிங் ஆப் ஆகும். அறிமுகம் இல்லாத இருவரை அறிமுகம் செய்து வைக்கும் இந்த செயலியை ஊக்குவித்ததாகவே ஹனின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வருடமே எகிப்தைச் சேர்ந்த ஹனின் கொசாம், மவ்டா-அல்-ஆதாம் உள்ளிட்ட 5 பேர் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு ஒழுக்கத்தை சீர்குலைப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கு தொடர்ந்த நிலையில் ஹனின் மீது குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
TikTok மற்றும் பிற வீடியோ பகிர்வு தளங்களின் அசுர வளர்ச்சியை எகிப்து அரசு தீவிரமாகவே கண்காணித்து வருகிறது. சோஷியல் மீடியாக்கள் மூலம் நாட்டின் இறையான்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும் எகிப்து குறிப்பிட்டுள்ளது. 2018 இல் நிறைவேற்றப்பட்ட எகிப்தின் சைபர் கிரைம் சட்டத்தின் "குடும்பக் கொள்கைகள் மற்றும் எகிப்திய சமூகத்தால் நிலைநிறுத்தப்படும் மதிப்புகளை மீறும் குற்றங்களுக்கு 6 மாதம் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.