இலங்கையில் அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் காலியாக உள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் மூன்று எம்பிக்களின் பெயர் முன்மொழியப்பட்டது. இதற்கான வாக்குப்பதவு நாளை நடைபெறவுள்ளது.


 






நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய நிலையில், ராஜபக்ச கட்சியின் துலாஸ் அலகபெரும, இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியில் தொடர்கின்றனர். 


சஜித் தனது ஆதரவினை துலாஸ் அலகபெருமவுக்கு தெரிவித்திருப்பது அதிபர் தேர்தலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் துலாஸ் அலகபெருமவுக்கும் ரணிலுக்கும்தான் போட்டி என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லாத போதிலும், பல்வேறு கட்சி அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலக நேர்ந்தது.


மக்கள் போராட்டம் இலங்கையில் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோட்டபய ராஜபட்ச, அதிபா் பதவியை ஜூலை 14ஆம் தேதி ராஜினாமா செய்தாா். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் ஜூலை 15ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக அன்றே பதவியேற்றாா்.


வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபி தலைவர் அனுரா குமாரதிசநாயக மற்றும் டல்லஸ் அல்லபெரும உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.


அனைத்துக் கட்சி அரசு


இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைத்துக் கட்சி அரசு அமைக்கலாம் என்றும், கருத்து  வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் பிற கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


மேலும், இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், இரண்டு ஏக்கர்களுக்கும் குறைவான நிலத்துக்கு பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.