இலங்கையில் அண்மையில் நடந்த மக்கள் புரட்சியின் காரணமாக அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார். தற்காலிகமாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்று இருக்கிறார்.


நிரந்தர அதிபரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் எம்பிக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த தற்காலிக அதிபராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க, எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கவில்லை.


அவர் நியமன எம்பி என்ற அடிப்படையில் உள்ளே சென்று இருக்கிறார். இவர் சார்ந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உறுப்பினராக இருக்கிறார். தற்போதைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக களமிறங்கி இருக்கிறார். இது நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி. 


டலஸ் அழகப்பெரும, ராஜபக்சவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி சார்பாக களம் காண்கிறார். அடுத்ததாக அனுரகுமார திசா நாயக்க ஜே.வி.பி எனப்படும் அதிதீவிர சிங்கள கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாக போட்டியிடுகிறார். இந்த நான்கு பேரும் தான் அடுத்த அதிபர் தேர்தலுக்கு  போட்டியிடுவதாக தற்போதைக்கு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


இவர்களில் சஜித் பிரேமதாச மும்முரமாக தனக்கான ஆதரவை திரட்டி கொண்டிருக்கிறார். இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை தனக்கு வழங்க கோரி சம்பந்தன் மற்றும் ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களை சந்தித்து இருக்கிறார்.


சம்பந்தன் வீட்டில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் யாருக்கு ஆதரவு தருவது என்பதை பற்றி விவாதிக்க கூடியிருக்கிறது. இதில் சாணக்கியன், சுமந்திரன் ஆகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  
 
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சஜித் பிரேமதாச நேரடியாக சம்பந்தனின் இல்லத்திற்கு வந்து தனக்கு அதிபர் பதவிக்கான தேர்தலில் ஆதரவு வழங்க வேண்டும் என்று சம்பந்தனை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதே வேளையில் சம்பந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.


கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களை கவனிக்கையில் தமிழர்களின் வாக்குகள் மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் மூன்று பிரிவுகளாக இருக்கிறார்கள். முஸ்லிம் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள். இந்த மூன்று பிரிவுக்கும் தனித்தனியாக கட்சிகள் இருக்கின்றன.


இது முறையே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என இலங்கை தமிழர்கள் இந்த மூன்று கட்சியிலும்  சிதறி இருக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்பதை பற்றி இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.


நாளையோ அல்லது வரும் தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிகளின் ஆதரவு யாருக்கு என்பது தெரிந்துவிடும். என்னதான் தேர்தல் காலங்களில் கூட்டணி வைப்பதற்காக பெரும்பான்மை கட்சிகள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினாலும், சிறுபான்மை கட்சிகள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றன.