ஒரு நிமிடத்தில் ஒரு பவுலில் இருந்த 19 சிக்கன் நக்கட்ஸை சாப்பிட்டு அசத்தியுள்ளார் இளம் பெண் ஒருவர்.
சிக்கன் நக்கட்ஸ் என்றால் நண்டு, சிண்டு முதல் வயோதிகர் வரை ஒரு விருப்பமான நொறுக்காகிவிட்டது. அதுவும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் எல்லாம் பாப்கார்னை ரீப்ளேஸ் செய்யும் ஸ்நாக்காகவும் ஆகிவிட்டது.
இந்நிலையில், ஒரு நிமிடத்தில் ஒரு பவுலில் இருந்த 19 சிக்கன் நக்கட்ஸை சாப்பிட்டு அசத்தியுள்ளார் இளம் பெண் ஒருவர். சிலருக்கு சாப்பாடு வயிறை நிரப்பும் வேலை. ஆனால் சிலருக்கு சாப்பாடு ஒரு ஃபீலிங். அப்படிப்பட்டவர் தான் இந்தப் பெண்மணி. இவரைப் போல் நம்மூரிலும் சாப்பாட்டு ராமன் தொடங்கி நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களெல்லாம் சாப்பாடு சாப்பிடுவதையே வீடியோவாக எடுத்துப் பகிர்ந்து லைக்ஸுன், கமென்ட்ஸும் அள்ளும் வகையறாக்கள். இன்னும் சிலர் விதவிதமாக, விநோதமாக எல்லாம் சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில், பிரிட்டனின் லீ சுட்கீவர் என்ற பெண் ஜெட் வேகத்தில் சிக்கன் நக்கட்ஸை சாப்பிட்டுள்ளார். இது மெக்டொனால்ட்ஸ் தயாரிப்பு.
அவர் எடுத்திருந்த பவுலில் மொத்தம் 20 சிக்கன் நக்கட்ஸ் இருந்தன. அவற்றின் எடை 352 கிராம். அவை முழுவதையும் சாப்பிட்டுவிட வேண்டும், அதுவும் ஒரு நிமிடத்தில் சாப்பிட்டுவிட வேண்டும் என்பது தான் லீ சுட்கீவர் அவருக்கு அவரே விதித்த டாஸ்க். டைமரை ஆன் செய்துவிட்டு அருகில் ஒரு க்ளாஸ் தண்ணீர் வைத்துக் கொண்டு ரெடி, ஸ்டெடி, கோ சொல்லி ஆரம்பித்தார் லீ. அப்புறம் என்ன சிக்கன் நக்கட்ஸை லபக் லபக் என்று உள்ளே தள்ளினார். ஆனால் மூன்று அல்லது நான்கு நக்கட்ஸ் முடித்தவுடன் கொஞ்சம் தண்ணீர் எனத் திட்டமிட்டு சாப்பிட்டார். ஆனால் இறுதியில் அவர் 19 நக்கட்ஸ் தான் சாப்பிட்டிருந்தார்.
ஐய்யோ மொத்தமாக 20 நக்கட்ஸையும் சாப்பிட முடியவில்லையே என்று அவர் வருந்தினார். எல்லாவற்றையும் சாப்பிட்டு நியூசிலாந்தின் ஆக்லாந்து மாடல் நேலா ஜிஸ்ஸரை வெற்றி பெறலாம் எனத் திட்டமிட்டிருந்தார். அதனால் வருத்தத்துடன் இருந்தார். இருந்தாலும் அடுத்த நிமிஷமே அவர் மகிழ்ச்சிக்கு உள்ளானார். காரணம் நேலா ஜிஸ்ஸரை விட ஒரு நக்கட் குறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட 54 கிராம் அதிகமாக சாப்பிட்டிருக்கிறார் லீ சுட்கீவர்.
இவர் இதற்கு முன்னரும் கூட பல்வேறு உணவு வகைகளை டார்கெட் ஃபிக்ஸ் செய்து சாப்பிட்டு வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.
சமீப காலத்தில் இப்படியான உணவு வீடியோக்களில் சீனப் பெண் ஒருவர் சிக்கன் விங்க்ஸ், நூடுல்ஸ் சாப்பிடும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப், இன்ஸ்டா, பேஸ்புக் என எல்லாவற்றிலும் வைரலாகப் பரவியது. ஆனால் அந்தப் பெண் சாப்பிடுவது உண்மையிலேயே அனைவரையும் பிரமிக்க வைப்பதாக இருந்தது. அவரை வைத்து நிறைய மீம்ஸ்கள் கூட வெளியாகின.