ஒரு வீட்டிற்கு பிங்க் நிற கதவு இருந்ததால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பிரிட்டனின் எடின்பர்க்ஸ் நியூ டவுன் பகுதியில் நடந்துள்ளது. அபராதத்துக்கு உள்ளான பெண்மணியின் பெயர் மிராண்டா டிக்ஸன். அவருக்கு வயது 48. அவர் அண்மையில் தனது வீட்டை புதுப்பித்தார். அப்போது அவர், வீட்டின் தலைவாசல் கதவை பிங்க் நிறத்தில் மாற்றியமைத்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான மிராண்டா அந்த வீட்டை 2019 ஆம் ஆண்டு பெற்றோர் வழி சொத்தாகப் பெற்றார்.
இந்நிலையில் தான் அவர் புதுப்பித்த வீட்டின் தலைவாசல் கதவு அதன் வரலாற்றுத் தன்மைக்கு ஏற்ப இல்லை என்று கூறி எடின்பர்க் சிட்டி கவுன்சிலில் ஒரு புகார் பதிவானது. எடின்பர்க் சிட்டி என்பது சர்வதேச பாரம்பரிய பாதுகாப்புப் பகுதியாக யுனெஸ்கோ அமைப்பால் கடந்த 1995ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனாலேயே அந்தக் கவுன்சிலும் விதிகளின் படி கதவிற்கு அடர்த்தியில்லாத வெளிர் நிறத்தை பூசும்படி வலியுறுத்தியது.
ஆனால் டிக்ஸனோ தன் கதவிற்கு அடர்த்தியான பிங்க் நிறமே பூசியதாகவும் ஆனால் அது பூசிய பின்னர் வெளிர் பிங்க் நிறத்திற்கு மாறிவிட்டதாகவும் கூறினார். மேலும் தன் வீட்டில் இருந்து 5 நிமிட நடைதூரத்தில் உள்ள பல வீடுகளிலும் தான் பூசியிருந்த பிங்க் நிறத்தைவிட மிகவும் பளிச்சென இருக்கும் அடர்த்தியான நிறங்களை கதவுகளுக்கு பூசியிருந்ததை அம்பலப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தான் அந்தப் பெண்ணுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 19 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.