தருமபுரி மாவட்டம் நத்தஹள்ளி அருகே உள்ளது இண்டூர் கிராமம், இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஜெயவேல் என்பவரின் மகன் கவுதம். இவரது தாய் ராணி ஈரோடு அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றி வருகிறார், கவுதம் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்றுள்ளார், உக்ரைன் நாட்டின் கீயவ் நகரில் உள்ள போகோமோலேட்ஸ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவ மாணவராக பயின்று வருகிறார்,  இவர் அங்கு செல்லப்பிராணியான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார், அப்பூனைக்கு 'க்ரே'  என்றும் பெயர் சூட்டி, ஸ்காட்டிஸ் போல்ட் ரக பூனை மீது மிகுந்த அன்பு செலுத்தி தன்னோடு வளர்த்து வந்துள்ளார்,  இந்த சூழலில் தான் உக்ரைனில் தற்போது நடந்து வரும் போர் காரணமாக பலரும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு நடத்தி வரும் நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்களை தாயகத்துக்கு பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கையையும் இந்தியா எடுத்து வருகிறது, இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா அழைத்து வரப்பட்டு உள்ளனர்,  இந்த சூழலில் தான் இன்றும் தமிழகத்தை சேர்ந்த பலர் தனி விமானம் மூலம் டெல்லியை அடுத்த காஜியாபாதில் உள்ள ஹிண்டான் விமானப்படை தளத்துக்கு வந்தனர், அப்போது அவர்களுடன் வந்த கவுதம் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்தார்,




அதாவதுதான் படிக்கும் இடத்தில் ஆசையாய் வளர்த்த க்ரேவையும் தன்னுடன் எடுத்து வந்தார், அவரது மனித நேயத்திற்கு உரிய  அங்கீகாரம் அளிக்கும் வகையில் உக்ரைனில் உள்ள அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் பூனைக்குட்டியை அவர்டன் எடுத்து செல்ல எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.


உக்ரைனில் நடக்கும் போரில் தான் மட்டும் வெளியேறினால் போதும் என்றில்லாமல் தான் வளர்த்த பூனை குட்டியையும் சுமந்து வந்திருக்கிறார் கவுதம், தொடர் சோதனைகளுக்கு நடுவே போரில் இருந்து பல பகுதிகளை கடந்து வந்து உக்ரைன் எல்லை நாடான போலாந்து வரை பூனைக்குட்டியை சுமந்து வந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றதாக இருந்தது,  இந்திய பூனை ரகங்களுக்கு மத்தியில் இந்த ஸ்காட்டிஸ் ரக பூனை அனைவரையும் கவர்ந்ததோடு ஆச்சரியமாக பார்த்தனர்,


ஹிண்டான் விமான நிலையத்தில் கவுதமின் சட்டைக்குள் இருந்தபடி க்ரே தனது தலையை மட்டும் எட்டிப்பார்த்தபடி இருந்தது. இதைப்பார்த்த சில ஊடகங்கள் அவரை பேட்டியும் எடுத்தனர்,. இந்த காட்சி சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து கவுதம் கூறும் பொழுது, நாங்கள் தங்கியிருந்த பகுதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெறும். அப்போது அங்குள்ள பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பதுங்கிக் கொள்வோம். பகல் நேரங்களிலும் வெளியே செல்ல முடியாது. தேவையான பொருட்களை மட்டும் விரைந்து சென்று அருகில் வாங்கிக் கொண்டு மீண்டும் பதுங்கி இருக்கும் இடத்திற்கு விரைந்து விடுவோம்.


இரவு முழுவதும் தொடர் குண்டு சத்தம் கேட்கும் அந்த பயத்தோடு தான் இருப்போம், இதற்கு மேல் தாயகம் திரும்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 400 பேர் கீயவில் இருந்து போவல் என்கிற இடத்திற்கு நடந்தே சென்று அங்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டோம். போலாந்து எல்லையில் உள்ள மேற்கு நோக்கி செல்லும் அனைத்து ரயில்களிலும் மாணவர்கள் ஏறிச் சென்றனர். நானும் ஒரு ரயிலில் ஏறி, போலாந்து எல்லைக்கு சென்றேன். அங்கு இந்தியர்கள் உள்ள பகுதிக்கு சென்ற போது அங்கு ஏற்கனவே வந்திருந்த இந்தியர்களுடன் சேர்ந்து நானும் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளேன் என்றார்


தொடர்ந்து க்ரே குறித்து அவர் கூறும் பொழுது, என்னுடைய பிறந்த  நாளுக்கு உக்ரைனில் உள்ள நண்பர்கள் எனக்கு பரிசாக அளித்தனர். ஒரு மாத குட்டியாக என்னிடம் வந்து, கடந்த 4 மாதங்களுக்கு மேல் என்னோடு தான் க்ரே இருக்கிறது. அதோடு க்ரே எப்போதும் அமைதியாக இருக்கும், என் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளது, இதனை அங்கு விட்டு விட்டு என்னால் அதனை பிரிந்து வர முடியாது என்பதால் உடன் அழைத்து வந்து விட்டேன், ஆனால் எல்லையைக் கடந்ததும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறைப்படி தகவல் தெரிவித்தேன்.


அவர்களும் எனக்கு அனுமதி கொடுத்து விட்டனர், ஆனால் அதற்கு முன்பு வரை அனுமதி கிடைக்காதோ என்ற பயத்தோடே அழைத்து வந்தேன் என்றார், தொடர் தாக்குதல்  பகுதியில் இருந்து நான் மட்டுமின்றி எனது செல்லமான க்ரே வையும் பத்திரமாக என்னுடன் அழைத்து வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார், அதோடு க்ரேவை பலரும் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தனர்,





படிக்க சென்ற இடத்தில் தன் உயிருக்கு பிரச்சினை என்ற போது தன் உயிரை மட்டும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமல் தான் ஆசையாய் வளர்த்த பூனைக்குட்டியையும் அதிகாரிகளின் உதவியோடு தன்னுடன் அழைத்து வந்து அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.