மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு அதிபர் முகமது பாசும் கைது செய்து அதிபர் மாளிகையில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும், ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றிவிட்டதாகவும் நைஜர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் ராணுவ கர்னல் மேஜர் அமடோ அப்த்ரமனே தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  






நாட்டின் பாதுகாப்பு நிலமையும், பொருளாதார நிலையும் மோசமடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்னல் மேஜர் அமடோ அப்த்ரமனே கூறுகையில், “ பாதுகாப்பு படையினரால் நைஜர் நாட்டில் நடைபெற்று வந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படும், அதேபோல் எல்லைகளும் மூடப்பட்டும். மறு அறிவிப்பு வரும் வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகரத்தில் வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் என்றும், நிலைமை சீராகும் வரை நில மற்றும் வான் எல்லைகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த செய்தியை அறிந்த மக்கள் பெருந்திரளாக தலைநகர் நியோமேவில் ஒன்று கூடியுள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் ஒன்றுக்கூடிய மக்களை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தினர். 1960 ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து நைஜர் விடுதலை அடைந்த காலம் முதல் நைஜர் நாட்டில் கிளர்ச்சிகள் வெடித்து வருகிறது.


இதற்கும் முன் 4 முறை அட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளது. 2010-ம் ஆண்டு அப்போதைய அதிபர் மாமடோ தஞ்சா  தலைமையிலான ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர்.  2021 ஆம் ஆண்டு முதல் நைஜர் நாட்டில் முகமது பாசும் அதிபர் பதவியில் இருந்து வருகிறார்.


நைஜர் நாட்டில் ஆயுத கிளர்ச்சிகள் அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் பொருளாதார வீழ்ச்சி, நாட்டின் பாதுகாப்பு ஆகியவை கருத்தில் கொண்டு ராணுவத்தினர் அந்நாட்டை கைப்பற்றி உள்ளனர். இருப்பினும் மக்கள் போராட்டம் பெருமளவு இல்லை  என தகவல்கள் வெளியாகியுள்ளது. நைஜர் நாட்டில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஐ.நா சபை, ஆப்பிரிக்கா ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.