உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என கூறி, அவரை கைது செய்ய கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி).
மாஸ்கோ தனது அண்டை நாட்டை கடந்த ஒரு வருடமாக ஆக்கிரமித்து வரும் நிலையில் அதன் ராணுவ படையினர் எல்லை மீறி பல அட்டூழியங்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மாஸ்கோ தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. ஐசிசி (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்), தரப்பில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடுகடத்தியது மற்றும் உக்ரைன் நாட்டில் இருந்து ரஷ்யாவிற்கு மக்களை சட்டவிரோதமாக அழைத்து வந்தது போன்ற சந்தேகத்தின் பேரில் புதினை கைது செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதே குற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா-பெலோவாவுக்கும் தனியாக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
இந்த தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஹோஃப்மான்ஸ்க், "சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வாரண்டுகளை பிறப்பித்துள்ள நிலையில், அவற்றை அமல்படுத்துவது சர்வதேச சமூகத்தின் கையில் இருக்கிறது. வாரண்டுகளை அமல்படுத்த நீதிமன்றத்திற்கு சொந்தமாக போலீஸ் படை இல்லை.
சர்வதேச நீதிமன்றம், ஒரு நீதிமன்றமாக தனது பணியை செய்து வருகிறது. நீதிபதிகள் கைது வாரண்ட் பிறப்பித்தனர். ஆனால், அதை நிறைவேற்றுவது சர்வதேச ஒத்துழைப்பைப் சார்ந்து உள்ளது" என்றார்.
ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான் ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரைனில் நடைபெறும் போர்க்குற்றங்கள், மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பற்றிய விசாரணையைத் தொடங்கினார். உக்ரைனுக்கு நான்கு முறை பயணம் மேற்கொண்ட போது, இந்த குற்றச் செயல்பாடுகளை பற்றி விசாரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதின் ஐசிசி இருக்கும் 123 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அவரை கைது செய்யப்படுவதில் ஏற்படும் சிக்கல்கள் என்ன? ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான் கூறுகையில் 123 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என தெரிவித்தார். இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் புதின் பட்டியலில் இருக்கும் 123 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளமுடியாது என கூறப்படுகிறது.
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஐசிசியில் உறுப்பினராக இல்லை. உக்ரைன் தற்போதைய சூழ்நிலையில் ஐசிசியின் அதிகார வரம்பை ஏற்றுக்கொண்டதால் புதினுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடிந்தது என கூறப்படுகிறது. ஆனால் மாஸ்கோ புதினுக்கு எதிரான பிடி வாரண்டை புறக்கணித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யா தனது குடிமக்களை ஒப்படைக்காது என தெரிவித்துள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை, எனவே சட்டப் பார்வையில், இந்த நீதிமன்றத்தின் முடிவுகள் செல்லாது" என்றார்.
ரஷ்யா இந்த பிடிவாரண்டை மறுத்தாலும் இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் லைபீரிய போர்வீரராக இருந்து அதிபராக மாறிய டெய்லரை ICC கைது செய்து தண்டனை வழங்கியது. அதேபோல் செர்பிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிச் 2006 ஆம் ஆண்டு யூகோஸ்லாவிய போர்க் குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலைக்கான விசாரணையின் போது சிறையில் உள்ள தனது அறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் போஸ்னிய செர்பியத் தலைவர் ரடோவன் கராட்சிக் இறுதியாக 2008 இல் பிடிபட்டார் பின் நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவரது இராணுவத் தலைவர் ரட்கோ மலாடிக் 2011 இல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் ரஷ்ய அதிபரும் கைது செய்யப்படுவார் என கூறப்ப்டுகிறது