இலங்கைக்கான சீனத் தூதர், வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த பல கருத்துக்கள் அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளதாக கூறி கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமே தவிர அழுத்தங்களோ, சர்ச்சைகளோ அவசியமில்லை  என சீன தூத‌ரின் கருத்துக்கு இந்திய தூத‌ரகம் பதிலளித்துள்ளது.


சீனத் தூதரின் கருத்துகள் குறித்து நாம் கவனஞ்செலுத்தியுள்ளோம் எனக் கூறியுள்ள இந்திய தூதரகம் அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை சீன தூதர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம் சாடி உள்ளது.


அண்மையில் இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீன தூதர் ஸி ஸென்ஹொங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடுமையான விமர்சனங்களை சீன தூதரின் அறிக்கையின் மீது முன் வைத்துள்ளது.


நாங்கள் சீன தூதுவரின் கருத்தினை அவதானித்துள்ளோம் அடிப்படை ராஜதந்திர நடவடிக்கையை , ஒழுங்குமுறையை மீறுவது அவரின் தனிப்பட்ட பண்பாக இருக்கலாம் என இந்திய தூதரகம் சுட்டிக்காட்டி இருக்கிறது.


இலங்கையின் வடபகுதி, அயல்நாடு பற்றிய  சீன தூதுவரின்  பார்வை அவரது சொந்த நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதின் அடையாளமாக இருக்கலாம் ,என தெரிவித்துள்ள தூதரகம், இந்தியா மிகவும் செயற்பாட்டு அளவிலும் கருத்தளவிலும் வித்தியாசமானது  என உறுதியளிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளது. ஒரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலின் வருகைக்கு அவர் புவிசார் அரசியல் சூழலை மையப்படுத்தி கருத்து கூறியுள்ளார், என தெரிவித்துள்ள இந்திய தூதரகம் ஒளிவுமறைவு மற்றும் கடனை அடிப்படையாக கொண்ட சீனாவின் நிகழ்ச்சிநிரல் தற்போது பெரிய சவாலாக மாறியுள்ளது என  சுட்டிக்காட்டி உள்ளது. குறிப்பாக சிறிய நாடுகளுக்கு சமீபத்தைய நிகழ்வுகள் ஒரு முன்னெச்சரிக்கை  எனவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர, இன்னொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


ட்விட்டர் பதிவில் சீன தூதுவரின் சமீபத்தைய கருத்து குறித்து இந்திய தூதரகம்  இவ்வாறு பதில் அளித்திருக்கிறது. சிறிய நாடுகளை தமது வலைக்குள் சிக்கு வைக்கும் சீனாவின் நோக்கத்தில் பெரிய அளவிலான கடன் தொகைகளை வாரி வழங்கி தற்போது  பொறிக்குள் சிக்க வைத்திருப்பதை இந்திய தூதரகம் சுட்டிக்காட்டி இருக்கிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர், இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீன தூதர் ஸி ஸென்ஹொங் தெரிவித்திருந்தார்.


ஒரு சீன கொள்கை முதல், யுவான் வாங் - 5 வரை கரம் கோர்ப்போம், நமது , சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சீன தூதரால்  விசேட அறிக்கை வெளியிடப்பட்டது . அதில் யுவான் வாங் - 5 கப்பல் விவகாரம், சீனா மற்றும் இலங்கையால் முறையாக தீர்க்கப்பட்டதாக சீன தூதர் தெரிவித்திருக்கிறார் .


இலங்கைக்கு ஆதரவாக பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாக்க, சர்வதேச தளத்தில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என கூறியுள்ளார்.   முன்னதாக இலங்கை , சீனா  வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது , மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று என அந்நாட்டு வெளியுறவுத்துறை பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார் .


 இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம், எனவே, உளவுக் கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் twitter வாயிலாக தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.