Emu War Of Australia: ஈமு பறவைகளுக்கு எதிரான போரில், இயந்திர துப்பாக்கிகளை கொண்டிருந்தும் கூட ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறமுடியவில்லை.


ஆஸ்திரேலியாவின் வினோதப் போர்:


வரலாற்றில் மிகவும் வினோதமான ராணுவ ஈடுபாடுகளில் ஒன்று பறவைகளுக்கு எதிராக போர் தொடுத்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், ஒரு நாட்டின் ராணுவம் பறவை இனத்திற்கு எதிரான போரில் தோல்வியுற்றது என்பது தான்.  மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது நம்பமுடியாததாகத் இருக்கலாம். ஆனால் அது உண்மைதான். கடந்த 1932 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பூர்வீக பறவை இனமான ஈமு மீது அந்நாட்டின் ராணுவம் போர் தொடுத்த போது இந்த வினோத நிகழ்வு அரங்கேறியது.


1932 ஈமு போர் என்றால் என்ன?


முதலாம் உலகப் போருக்குப் பிறகு, பல ஆஸ்திரேலிய மக்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள விளிம்பு நிலங்களில் குடியேறினர். வறண்ட மண்ணை செழிப்பான கோதுமை வயல்களாக மாற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்களின் விவசாய இலக்குகள் விரைவில் கனவுகளாக மாறிப்போயின. காரணம், கிட்டத்தட்ட 20,000 ஈமுக்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பெரிய, பறக்க முடியாத பறவைகள்,  ஒரு பறவை ராணுவத்தைப் போல அவர்களின் பண்ணைகளில் இறங்கின. இந்த ஈமுக்கள் வெறும் பசியுடன் இல்லை புரட்சிட்யாளர்களை போல எந்த ஒரு அட்சமும் இன்றி அலட்சியத்துடன் வேலிகளை புறக்கணித்து, பயிர்களை மிதித்து, அழித்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தின.


1930களின் பிற்பகுதி வரை நீடித்த அமெரிக்காவின் பெரும் மந்தநிலை, பொருளாதாரத்தின் மீதான அதன் பிடியை இறுக்கியதால், விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கினர். விரக்தியடைந்த விவசாயிகள், அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் நம்பமுடியாத மற்றும் சிரிப்பை சந்திக்கும் ஒரு நடவடிக்கையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் ஈமு பறவைகளின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு ராயல் ஆஸ்திரேலிய பீரங்கியின் மூன்று வீரர்களை, இயந்திர துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது.


ஆஸ்திரேலியாவின் ஈமு போர் ஆரம்பம்:


நவம்பர் 2, 1932 இல், மேஜர் க்வினிட் பர்வ்ஸ் வைன்-ஆப்ரி மெரிடித் தனது படைகளை இரண்டு லூயிஸ் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 10,000 தோட்டாக்கள் ஆயுதங்களுடன் போருக்கு அழைத்துச் சென்றார். திட்டம் எளிமையானது. ஈமுக்களை அழித்து,  கோதுமை வயல்களில் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்கு. இருப்பினும், ஈமுக்களுக்கு வேறு யோசனைகள் இருந்தன. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன், இந்த பறவைகள் சிறிய குழுக்களாக பிரிந்து, வெகுஜன அழிப்புக்கான வீரர்களின் முயற்சிகளை திறம்பட தவிர்க்கும் ஒரு விசித்திரமான திறனை வெளிப்படுத்தின. முதல் சில நாட்கள் இது ஒரு நகைச்சுவை சம்பவமாகவே கருதப்பட்டன. வீரர்கள் டிரக்குகளைப் பயன்படுத்தி ஈமுக்களை விரட்ட முயன்றனர். ஆனால், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. கரடுமுரடான நிலப்பரப்பில் வாகனங்களை விட பறவைகள் வேகமாக ஓடியதால், நகரும் வாகனத்தில் இருந்து அவற்றை சுடுவதும் மிகவும் சிரமமாக இருந்தது.


ஈமுக்களின் போர் தந்திரங்கள்


ஈமுக்கள் கொரில்லா உத்திகள் என்று குறிப்பிடக்கூடிய தந்திரங்களை வெளிப்படுத்தின.  வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்க அவை ஒருங்கிணைந்த குழுவினை அனுப்பின. மேஜர் மெரிடித் அப்போது இந்த பறவைகள் "டேங்க் அளவிற்கு பாதிப்பில்லாத இயந்திர துப்பாக்கிகளை எதிர்கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார். மேலும், ஈமுக்கள் சண்டையிடும் பறவைகள் மட்டும் அல்ல தந்திரமாகவும் செயல்படக்கூடியவை என்பது தெளிவாகத் தெரிந்ததால், வீரர்களின் மனவுறுதி சரிந்தது. 


முடிவை மாற்றிய ஆஸ்திரேலியா:


நவம்பர் 8 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ராணுவத்தின் பல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இந்த விவகாரம் ஊடக செய்திகளிலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. தைரியத்திற்கான பதக்கங்களை யாருக்கேனும் தரவேண்டும் என்றால், ஈமுக்களே அதற்கு தகுதியானவை என பரிந்துரைக்கப்பட்டு செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக, ராணூவம் இந்த நடவடிக்கையிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கப்பட்டது.  இருப்பினும், ஒரு சிறிய இடைவெளி மற்றும் ஈமு உயிரிழப்புகள் பற்றிய சில மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகளுக்குப் பிறகு, நவம்பர் 12, 1932 அன்று ராணுவம் மீண்டும் களத்திற்கு திரும்பியது.


டிசம்பர் 10, 1932 வரை தொடர்ந்த இந்த "போரின்" போக்கில், சிப்பாய்களால் 986 ஈமுக்களை மட்டுமே கொல்ல முடிந்தது. ஒரு பறவைக்கு கிட்டத்தட்ட 10 சுற்று தோட்டாக்கள் செலவழிக்கப்பட்டன. பெரும் செலவிற்கு மத்தியிலும், ராணுவத்தின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த ஈமு குழுவும் பாதிக்கப்படவில்லை. இந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்ததாகக் கருதப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதர்களை விட வேகமாக ஓடக்கூடிய ஒரு பறவையின் மீது வெற்றியை எவ்வாறு அறிவிப்பது? அரசாங்கம் இறுதியில் ராணுவத் தலையீட்டிலிருந்து விலகி, வலுவான வேலிகளைக் கட்டுவதாக தனது திட்டத்தை மாற்றியது. இது ஆஸ்திரேலிய விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள முடிவாக இருந்தது.