சாதிக்க வயது தடையில்லை என்ற கூற்று உள்ளது. அதற்கு சான்றாக பலர் நம்முடைய வாழ்வில் அன்றாடம் வந்து செல்கின்றனர். அப்படி ஒரு நபர் தன்னுடைய வயதை பொருட்படுத்தாமல் சாதனை ஒன்றை செய்துள்ளார். யார் அவர்?


 


தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் சவாங் ஜன்ப்ரம். 102 வயதான இவர் கடந்த வாரம் நடைபெற்ற 100-105 வயதினருக்கான தடகள போட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் 100 மீட்டர் ஒட்டபந்தயத்தில் பங்கேற்றுள்ளார். பந்தய தூரத்தை 27.08 விநாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் தெற்கு ஆசியாவில் மிகவும் வயதான தடகள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 


 






இவர் தொடர்பாக ஒரு ஆங்கில தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வயதிலும் அவர் தினமும் தன்னுடைய 70 வயது மகளுடன் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அத்துடன் தடகள போட்டிகள் இருக்கும் சமயத்தில் இவர் தன்னுடைய உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றை வேகமாக மேற்கொண்டு அதற்குஏற்ப தயாராகி வருகிறார். மற்ற நேரங்களில் இவர் வீட்டு வேலைகள் மற்றும் பிற விஷயங்களில் ஈடுபடுகிறார். 


ஒட்டப்பந்தயம் தவிர இவர் ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். இது தொடர்பாக சவாங், “விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன். மேலும் இது என்னை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்து கொள்ளவும் உதவுகிறது. அத்துடன் விளையாடுவதால் சரியான நேரத்தில் பசி ஏற்பட்டு நன்றாக உணவு உட்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


சவாங் குறித்து அவருடைய மகள், “என்னுடைய தந்தை எப்போதும் நேர்மறை கருத்துகளை கொண்டவர். அதன்காரணமாகவே அவருடைய மனநலம் எப்போதும் சிறப்பாக உள்ளது. மேலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது அவரை மேலும் பலம் உள்ளவராக மாற்றியுள்ளது” எனக் கூறியுள்ளார். 




தாய்லாந்து நாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் அங்கு வெறும் 300 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:இந்தியா, பாக்., மோதும் மகளிர் உலகக் கோப்பை! சாதனையை தக்கவைக்குமா மித்தாலியின் படை !