'துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது. எப்பவும் வரலாம் எவர் கண்டார்..' அட காதல் மட்டுமல்ல கோபம் கூட அப்படித்தான் போல. அதுவும் இதுக்கு உலகம் முழுக்க ஒரே ஃபார்முலா தான்.
தாய்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னைப் பிரிந்த காதலனை கடுப்பேத்த ரூ.23 லட்சம் விலையுடைய பைக்கை எரித்து சாம்பலாக்கினார்.
தாய்லாந்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் பல ஆண்டுகளாக ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்துவந்தார். காதல் காலத்தில் தனது காதலருக்கு ஆசை ஆசையாய் ஒரு பைக் வாங்கிக் கொடுத்தார். பைக் என்றால் சாதாரண பைக் அல்ல, காஸ்ட்லி பைக். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 லட்சம் விலையுயர்ந்த பைக். காதல் ஜோடி அந்த பைக்கில்தான் உல்லாசமாக ஊர் சுற்றிவந்துள்ளனர்.
இந்நிலையில் காதல் கசக்குதைய்யா.. வரவர காதல் கசக்குதைய்யா என்று இருவருக்கும் முரண் முற்றியது. விளைவு, பிரேக் அப். நமக்குள் ஒத்துவராது பிரிந்துவிடுவோம் என்று பிரிந்தேவிட்டனர்.
ஆனால் காதலனோ அதை சீரியஸாகவே கடைபிடித்தார். பிரேக் அப் சொன்ன பின்னர் காதலியை திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவர் வாங்கிக் கொடுத்த வண்டியில் வேஎலைக்கு மட்டும் போய்வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் நேரே காதலனின் பள்ளிக்குச் சென்றார். பார்க்கிங்கில் பகட்டாக காதலன் நிறுத்திவைத்திருந்த பைக்கைப் பார்த்தார். கோபம் கொளுந்துவிட்டு எரிந்தது. அப்படியே அந்த கோபத்தை பைக் மீது கொட்டி பெட்ரோல் ஊற்றி பைக்கைப் பற்ற வைத்தார். அவரின் கோபத்துக்கு காதலரின் பைக்குடன் அங்கு பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள் எரிந்து எலும்புக்கூடாகின. கோபம் தீர்ந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், ரூ23 லட்சம் மதிப்பிலான ட்ரையம்ப் மோட்டர் சைக்கிள் எரிந்து நாசமானது.
போலீஸ் வழக்கு..
காதலனைக் கடுப்பேத்த அந்த இளம்பெண் இப்படிச் செய்திருந்தாலும் பள்ளி வளாகத்தின் பார்க்கிங்கில் அவர் செய்த இச்சம்பவம் குற்றமாகியுள்ளது. இதுகுறிட்து தோங்லோர் காவல்துறை கூறுகையில், இளம் பெண் பைக்கை எரிப்பது சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில் உறுதியாகியுள்ளது. அந்தப் பெண் பள்ளி வளாகத்தின் மூன்றாவது தளத்திலிருந்த பார்க்கிங்கில் இதனைச் செய்துள்ளார். அதே தளத்தில்தான் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வகுப்பறை உள்ளது. ஒருவேளை பள்ளி நடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதனால் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இளம் பெண் பைக்கை எரிக்கும் காட்சி இனையத்தில் வைரலாகி, உலகளவில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.