உலகின் மிகவும் முக்கியமான பாப் பாடகிகளில் ஒருவர் பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய நீண்ட கால நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், சில காரணங்களால் அந்த திருமணம் செல்லாது என்று பிரிட்னி ஸ்பியர்ஸ் திருமணம் செய்த 55 மணிநேரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தன்னுடைய செயல்பாடு குறித்தும் பிரிட்னி ஸ்பியர்சுக்கு புரிதல் இல்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.


இதையடுத்து, அதே ஆண்டில் கெவின் பெடர்லைன் என்பவரை பிரிட்னி ஸ்பியர்ஸ் இரண்டாவதாக திருமணம் செய்தார். மூன்று ஆண்டுகளே இணைந்து வாழ்ந்த அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 2007-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.




இந்த நிலையில், பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது நீண்ட கால நண்பரும், உடற்பயிற்சி பயிற்சியாளருமான சாம் அஸ்காரி என்பவரை காதலித்து வந்தார். சாம் அஸ்காரியை கரம்பிடிக்க பிரிட்னி ஸ்பியர்ஸ் திட்டமிட்டிருந்தார்.


பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த 2008ம் ஆண்டு முதல் தனது தந்தையின் கட்டுப்பாட்டிலே இருந்து வந்தார். மேலும், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை குறித்த எந்த ஒரு முடிவையும் எடுக்கும் உரிமையை பிரிட்னி ஸ்பியர்ஸ் சுயமாக எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனால், அவர் சாம் அஸ்காரியை திருமணம் செய்வதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து, தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வரவும், தனது திருமணம் தொடர்பான முடிவை தானே எடுக்க அனுமதிக்குமாறும் பிரிட்னி ஸ்பியர்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறவும், தனது திருமண வாழ்க்கை குறித்து சுயமாக முடிவு எடுக்கவும் உத்தரவிட்டது.




இதையடுத்து, 27 வயதான சாம் அஸ்காரியை 39 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரிட்னி ஸ்பியர்சின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணம் நடைபெறும் இடம், திருமண தேதி தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் பல்வேறு செய்திகளை படிக்க : ஒரு ஊரே கடலில் மிதந்து வருகிறது... உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் பிரிட்டன் வந்தடைந்து!