அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் பால்டிமோர் எனும் பகுதியில் பணியாற்றிவந்தார் நக்கா சார் சரண். ஆரம்பத்தில் அங்கே மேற்படிப்புக்காகச் சென்றவர் அங்கேயே பணியில் இணைந்தார். ஆனால் அவருக்கு இப்படிப்பட்ட சோக முடிவு நேர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா தான் 23 வயதான நக்கா சாய் சரணுக்கு சொந்த ஊர். அவர் அமெரிக்காவின் பால்டிமோரில் கடந்த இரண்டாண்டுகளாக பணி புரிந்துவந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் தனது நண்பரை விமான நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு திரும்பினார். அப்போது அவரை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து மேரிலேண்ட் ட்ரான்ஸ்போர்டேஷன் அத்தாரிட்டி போலீஸ் (எம்டிடிஏ) கூறுகையில், ஞாயிறு காலை 4.30 மணியளவில் கிழக்கு கடற்கரை வடக்கு மேற்கு இன்டர்ஸ்டேட் ஹைவேயில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிக் கிடப்பதாகத் தகவல் வந்தது. நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அப்போது அங்கே ஹூண்டாய் டுஸ்கான் ரக கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்தது. அதில் ஒரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆர்.ஆடம்ஸ் கவ்லே ஷாக் ட்ராமா சென்டருக்கு அனுப்பிவைத்தோம். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அதனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறினர்.
நக்கா சாய் சரணின் குடும்பத்தார் அதிர்ச்சியில் உள்ளனர். அவரது தந்தை ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். நக்கா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படிப்புக்காக பால்டிமோர் சென்று அங்கேயே பணி செய்ய ஆரம்பித்துள்ளார். அவரது சகோதரியும் அமெரிக்காவில் பயின்று வருகிறார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம்:
துப்பாக்கி பயன்படுத்தும் குடிமக்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடம் வகிக்கும் நிலையில், ஹிலரி கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்க தலைவர்கள் பலரும், குடிமக்கள் துப்பாக்கி பயன்படுத்துவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் மே மாதத்தில் மட்டும் 5 இடங்களில் பொதுவெளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளன. மே 25ஆம் தேதி டெக்சாஸின் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலும் 14ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலும் சந்தேக நபர்கள் வணிக ரீதியிலான (கடைகளில் வாங்கக்கூடிய) கைத்துப்பாக்கியை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு முடிவு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் மக்கள் குரலும், அரசியல் கட்சிகளில் குரலும் வலுத்து வருகின்றன. அதிபர் ஜோ பிடனும் கூட துப்பாக்கிக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் தருணம் வந்துவிட்டது என்றே கூறியிருந்தார்.