ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலி இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 6.1 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.


20 ஆண்டுகளில் இல்லாத பயங்கரம்:


ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் கடுமையான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் தலிபான் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது. 






உதவி கோரிய தாலிபான்;


இந்நிலையில் தாலிபான் ஆட்சியாளர்கள் ஐ.நா.விடம் உதவி கோரியுள்ளனர். யுனிசெஃப் அமைப்பின் காபூல் பிரிவு தலைவரான சாம் மோர்ட் இது குறித்து பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாகாணங்களிலும் வசிப்பிடங்கள் பலமானதாகக் கட்டப்படவில்லை என்பதால் இந்த நிலநடுக்கம் அங்கு பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாத்திமா கூறுகையில், எங்கள் வீட்டின் அறைகள் இடிந்து விழுந்தன. எங்கள் அக்கம்பக்கத்தினர் வீடுகளும் சரிந்தன. நாங்கள் ஏற்கெனவே துயரில் உள்ளோம். இது இன்னும் நிலைமையை மோசமாக்கியுள்ளது என்றார்.


ஆப்கனில் இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு உதவி செய்ய யாரும் இல்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அண்டை மாகாண மக்களே சென்று கொண்டிருக்கின்றனர். இதுபோல் வந்த நபர் ஒருவர், நான் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். இதுவரை 40 சடலங்களைக் கண்டுவிட்டேன் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இறந்தவர்களில் பெரும்பாலோனோ குழந்தைகள் எனக் கூறப்படுகிறது. உள்ளூர் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூட போதிய வசதியின்றி உள்ளன. 


ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டில் தாலிபான் ஆட்சி அமைந்தது. அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் தாலிபான்கள் தங்கள் ஆட்சியை அமைத்தனர். ஆனால் இஸ்லாமிய ஷாரியத் சட்டப்படியே ஆட்சியை நடத்துகின்றனர். அங்கு பெண் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகள் பலவும் தலிபான் ஆட்சியை அங்கீகரிக்காததால் அங்கு பசியும், பட்டினியும், பஞ்சமும் நிலவுகிறது.