கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கடுமையான மனித உரிமை மீறல் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பயந்து, அந்த நாட்டில் இருந்து தப்பித்து ஓடவும் வழிவகுத்து விட்டது. "யாரும் பயப்பட தேவையில்லை, அமைதியான நல்ல ஆட்சியை தருவோம்" என்று தலிபான்கள் நம்பிக்கை தந்தாலும், அதை மக்கள் ஏற்க தயாராக இல்லை. நாளுக்கு நாள் திடீர் திடீர் திருப்பங்கள் அங்கு நடந்து வருகின்றன. பெண்களுக்கான தாக்குதல்கள் அதிகமாகி வரும் சூழலில், அந்நாட்டு மக்களுக்கான பாதுகாப்பு குறித்த பீதியும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் இனி பல்கலைக்கழகங்கள், லைப்ரரிகள், கல்விக்கூடங்கள் என்ன ஆகும் என்றும் கவலையும் எழுந்துள்ளது. இதனிடையே தலிபானின் தண்டனைகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததில் உறைய வைக்கும் அதிர்ச்சிகள் காத்திருந்தன. 



அறம் மற்றும் துணை அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுகிறது, அந்த சட்டம் பெண்கள் மீதான அடக்குமுறையையும், நாட்டு மக்கள் மீதான அதிகாரத்தையும் முன்வைக்கும். அதில் ஆண் துணையின்றி பெண்கள் வெளியே செல்வதை தடை செய்வது மற்றும் இசை மற்றும் பிற பொழுதுபோக்குகளை நாட்டில் தடை செய்வது போன்றவை அடங்கும். இஸ்லாமிய விதிகளின்படி தண்டனைகள் கொடுக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானின் மத்திய மண்டல பொறுப்பு அதிகாரியான முகமது யூசுப் கூறினார். தலிபான்கள், தங்கள் முந்தைய ஆட்சியில், குற்றங்களுக்கான தண்டனைகளாக  கல்லால் அடிப்பது, ஆண்குறிகளை துண்டிப்பது, பகிரங்கமாக தூக்கிலிடுவது போன்றவைகள் இருந்தன.


”திருடர்களின் கைகள் துண்டிக்கப்படும் என்றும் சட்டவிரோத உடலுறவில் ஈடுபடுபவர்கள் மீது கல்லெறியப்படும்" என்றும் யூசுப் கூறினார். அறிந்தே கொலை செய்த குற்றவாளி கொல்லப்படுவான் என்றும் கூறினார். அல்லாமல் கொலை தற்செயலாக நடந்தால், குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். நான்கு சாட்சிகள் தேவை என்றும் அந்த சாட்சிகள் அனைவரும் ஒரே கதை சொல்ல வேண்டும். கதையில் சிறிய சிறிய வித்தியாசங்கள் இருந்தால், தண்டனை இருக்காது. ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே விஷயத்தை அச்சு பிசகாமல் சொன்னால், அதே இடத்தில் அதே நேரத்தில், உடனே தண்டனை வழங்கப்படும். ஒரு விஷயத்தை எல்லோரும் ஒரே போல உள்வாங்குவதில்லை. அப்படி ஒரே மாதிரியான உள்வாங்கி இருந்தால், அவர்கள் பயற்சி எடுத்து விசாரணைக்கு வந்திருக்கிறார்கள் என்று தலிபான் அரசு பொருள் கொள்கிறது. இஸ்லாமிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமைதியான நாட்டை நாங்கள் கட்டமைக்க விரும்புகிறோம். அமைதி மற்றும் இஸ்லாமிய தீர்ப்புகள் மட்டுமே எங்களுடைய ஒரே விருப்பம்" என்று யூசுப் பேசியுள்ளார்



இதற்கிடையில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்லும் முன்னாள் அரசாங்கத்தின் தூதர், "தலிபான்கள் ஏற்கனவே பெண்களைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அளித்த வாக்குறுதிகளை மீறிவிட்டனர். தலிபான்கள் பெண்களின் உரிமைகளை மதிக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர், ஆனால் பெண்களின் உரிமைகள் நாட்டில் இருந்து மெதுவாக மறைந்து வருகிறது" என்று மனித உரிமைகள் கவுன்சிலிடம் கூறினார்.