ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திவருகின்ற சூழலில் தற்போது அமெரிக்கர்களின் பயோமெட்ரிக் சாதனங்களையும் கைப்பற்றியிருப்பது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தலிபான்கள் தற்போது பல்வேறு வன்முறை நிகழ்வுகளை நிகழ்த்தி மீண்டும் 20 நாட்களில் தங்கள் தேசத்தை மறுபடியும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர், மீண்டும் தங்கள் ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புதிய ஆட்சியில் பெண்களும் இடம்பெற வேண்டும் என்று தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தற்போது பழிவாங்கல் நடவடிக்கை இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தான் தற்போது அமெரிக்காவின் பயோமெட்ரிக் கருவியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறை என்பது ஒருவரின் அனைத்து விதமான தரவுகளை கண்டறியப்படுவது. கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் பயோமெட்ரிக் கருவிகளை தான் பயன்படுத்தி வந்தது. கையடக்க ஒருங்கிணைப்பு அடையாளம் கண்டறிதல் உபகரணங்கள் (HIIDE) என்று அழைக்கப்படும் இந்த கருவியில் விழி ரேகை, கை ரேகை, அங்க அடையாளங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் ஒருவரின் முழு தகவல்களும் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இதிலிருந்து ஏதாவது ஒரு தரசு கசிந்துவிட்டால், அதனை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கருவியைத் தான் தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரைக் கண்டறிய இந்த கருவிகள் பயன்படுவதாக கூறப்படும் அதேவேளையில், அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு நபர்களின் விவரங்களும் இந்த கருவியில் இடம்பெற்றுள்ளன. மேலும் அமெரிக்க ராணுவத்துடனான கூட்டு முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களின் தகவல்கள் இதில் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது வெளியான செய்தியில், பயோமெட்ரிக் கருவியை இயக்க தலிபான்களுக்கு கூடுதல் கருவிகள் தேவைப்படும் எனினும் பாகிஸ்தான் அதனை வழங்கக்கூடும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
-
குறிப்பாக இந்த கருவியை நீண்ட காலமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தலிபான்கள் கையில் இந்த கருவி சிக்கியுள்ளதால் அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான்வாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக தாலிபான்கள் கையில் இந்த சிறிய அளவிலான கருவி சிக்கியுள்ளதால் இதனை அமெரிக்காவிற்கு எதிராகப்பயன்பத்துவார்களா? மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் வாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.