ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவியதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தனர். இதையடுத்து அமெரிக்க படைகள் அங்கு சென்று முகாமிட்டு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் அவ்வப்போது அங்கு தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வந்தன.


இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து தலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். 2021 ஆகஸ்ட் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தலிபான்கள் ஆட்சி செய்தனர். அப்போது பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பயந்துபோன ஏராளமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில் தான் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தலிபான்கள் கூறினர்.


ஆனால் இது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. ஏனென்றால் அதிகாரத்தை கைப்பற்றிய சில மாதங்களிலேயே தலிபான்கள் அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கினர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.



விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தாலிபான்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாக தங்களின் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற 4 நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும்.


இதுபோன்ற வித்யாசமான அறிவிப்புகள் கண்டு உலக மீடியாக்கள் கேலி செய்தாலும், திருந்ததுவதாக இல்லாமல், தொடர்ந்து இதே போன்ற வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. கணவன் மனைவியாகவே இருந்தாலும் தனித்தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற விதிகள் கடும் விமர்சனத்திற்குள்ளானது. 






ஆனால் அப்படியேதும் விதிமுறைகள் இங்கு கொண்டுவரப்படவில்லை என்று அறம் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. அந்த அமைச்சகத்தை சேர்ந்த சுஹைல் ஷஹீன் வெளியிட்டுள்ள டீவீட்டில், "சில ஊடகங்கள், ஓட்டல்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து அமர்ந்து உணவு உண்பதற்கு ஆப்கானிஸ்தான் அரசு தடை விதித்ததாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அப்படி எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, அந்த செய்தியில் உண்மையில்லை", என்று எழுதி உள்ளார்.