தலிபான் அமைப்பின் உயர்கல்வித் துறை அமைச்சர் பெண்களின் கல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவர். எனினும் ஆண் - பெண் இருபாலரும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்க அனுமதி இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த ஆகஸ்ட் 15 அன்று, ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினர் அந்நாட்டின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர். அமெரிக்க ராணுவப் படையினர் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்தனர். அமெரிக்க ராணுவம் வெளியேறியவுடன், தாலிபான் அமைப்பினர் நாட்டைக் கைப்பற்றினர். ஆப்கான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். 


இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை தாலிபான் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்த போது, பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது முதலானவை தடை செய்யப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் தாலிபான் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்திருக்கும் நிலையில், இதுகுறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. 



அப்போது தலிபான் அமைப்பினரின் உயர்கல்வித் துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி, பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் இஸ்லாமியச் சட்டவியல் விதிகளின் தங்கள் விளக்கத்தை அமல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


சமீபத்தில் லோயா ஜிர்கா என்று அழைக்கப்படும் பெரியவர்களுடனான சந்திப்பு ஒன்றில் பேசிய அப்துல் பாகி ஹக்கானி, “ஆப்கானிஸ்தான் மக்கள் உயர்கல்வியை ஷரியா சட்டத்தின்படி, பாதுகாப்பாகப் பெறுவர். ஆண்களும் பெண்களும் கலந்து இருக்கும் இடத்தில் அல்லாமல், தனித்தனி இடங்களில் வகுப்புகள் நடைபெறும்” என்று கூறினார். 


மேலும் அவர் ஆண், பெண் இரு பாலரையும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என்ற அளவிலியே பிரிக்கும் பணிகள் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். 


“தலிபான் அமைப்பு இஸ்லாமிய அடிப்படையிலான கல்வியைத் தர விரும்புகிறது. மேலும், எங்கள் கல்வி முறை இஸ்லாமிய, தேசிய, வரலாற்று மதிப்புமிக்கதாக இருக்கும். மேலும் இதன் மூலம் பிற நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்குக் கல்வித்தரம் உயர்த்தப்படும்” எனவும் அப்துல் பாகி ஹக்கானி கூறியுள்ளார்.



கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்கும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், இப்படியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது எனவும், அதற்குக் காரணமாகத் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெண்களோடு பழக்கம் இல்லாதவர்கள் எனக் கூறப்பட்டது. எனினும் மருத்துவத் துறையில் பணியாற்றும் பெண்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


அமெரிக்கப் படைகளும், பிற நாட்டுப் படைகளும் வெளியேறிய பிறகு, முறையான ஆப்கானிஸ்தான் அரசை அமைக்கவுள்ளதாகவும் தாலிபான்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.