ஆப்கானிஸ்தானையே ஆட்டிப்படைத்து வரும் தலிபான்கள் இந்தியாவுக்கு மட்டும் சபாஷ் சொல்லியிருக்கிறார்கள் ஏன் தெரியுமா? ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய இந்தியா மேற்கொண்ட சீரிய முயற்சிகளுக்காகத் தான் இந்த சபாஷ்.


கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், அல் கொயதா தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் முழுக் கவனமும் திரும்பியது. அல் கொய்தாவின் ஒசாமா பின் லேடனுக்கு ஆப்கனின் தலிபான் தீவிரவாதிகள் அடைக்கலம் கொடுத்தது தெரிய வந்தது. இதனால், உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்தது. அல் கொய்தாவை எதிர்க்க ஆப்கனுடன் சேர்ந்து தலிபான்களையும் எதிர்த்தது.


அல்கொய்தா கூண்டோடு ஒழிந்தது. தலிபான்கள் குழுவும் அடங்கியது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் அங்கிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கியுள்ளன. இதனால், தலிபான்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12க்கும் மேற்பட்ட மாகாணங்களை தலிபான்கள் ஆக்கிரமித்துவிட்டன.


ஒன்றும் செய்யமாட்டோம்:


ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தன.
கடந்த 3 மாதங்களாக ஆப்கானிஸ்தான் மீண்டும் கலவர பூமியாக மாற்றியிருப்பதால் அங்கிருந்து மற்ற நாடுகள் தங்கள் கட்டுமானப் பணிகளை நிறுத்திவிட்டு வெளியேறுவிட்டன. 


இந்தியாவும், படிப்படியாக தனது பணிகளை நிறுத்திக் கொண்டுள்ள நிலையில் அங்குள்ள தூதரகத்துக்கும், இந்திய அரசு மேற்கொண்ட கட்டுமானப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என கவலை தெரிவித்திருந்தது.
கடந்த வாரம் வெளியுறவுத் துறை செயலர் அநிந்தம் பாக்சி பேசுகையில், ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது. வர்த்தக ரீதியான விமான போக்குவரத்துகள் நிறுத்தப்படுகின்றன. ஆகையால் இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பவும் என்று கோரிக்கை விடுத்தார்.  இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாஹீன் கூறுகையில், "எந்த ஒரு தூதரகத்தையும் தாக்குவதில்லை என்று தலிபான்கள் உறுதியாக உள்ளனர். இந்தியா, உள்ளிட்ட நாடுகள் ஆப்கன் மக்களுக்காக மேற்கொண்டுள்ள கட்டுமானப் பணிகளை பாராட்டுகிறோம். அதனை நாங்கள் சிதைக்கமாட்டோம் என உறுதியளிக்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. அணைக்கட்டுகள், தேசிய நலனுக்கான கட்டுமானங்கள் என்று இந்திய அரசு ஆப்கனின் வளர்ச்சிக்காக நிறைய செய்துள்ளது. மக்களின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.