ஆஃப்கானில் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அங்கே ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் விரைந்து தங்கள் பணிகளுக்குத் திரும்பவேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். 'உங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் முழு நம்பிக்கையுடன் உங்களது பணிக்கு விரைந்து திரும்புங்கள்’ என தலிபானின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.  மேலும், பெண்களும் தங்களது அரசுப்பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என தலிபான் குறிப்பிட்டுக் கோரிக்கை வைத்துள்ளது. 



தலிபான் கலாச்சாரக் குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘இந்த இஸ்லாமிய அரசு பெண்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. ஷரியத் சட்டத்தின்படி அவர்களும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.அரசாங்கத்தின் அமைப்பு எப்படி இருக்கும் என்பது முழுமையாகத் தெளிவாக இல்லை. ஆனால் அனுபவத்தின் அடிப்படையில், ஒரு முழு இஸ்லாமிய தலைமை இருக்க வேண்டும் மற்றும் அனைத்து தரப்பினரும் அந்தத் தலைமையில் ஒரு அங்கமாகச் சேர வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க, C-17 வகை இந்திய ராணுவ விமானம் காபூல் விமான நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. காபூல் விரைந்த அந்த விமானம், 120 இந்தியர்களை மீட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ளது. 


அந்த விமானத்தில், இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உட்பட பிற இந்திய அதிகாரிகள் நாடு திரும்பி வருகின்றனர். மேலும், தற்போதைக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசு உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டுடனான உறவுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப ‘அவசரக்கால எலக்ட்ரானிக் விசா’ முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.





இதன் மூலம், விரைவாக விசா வழங்கப்பட்டு நாடு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, காபூல் நகரில் பதற்ற சூழல் நிலவி வருவதால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். இதனால், காபுல் விமானநிலையத்தில் பதற்ற நிலை நிலவுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. கூட்டம் கூட்டமாக காபுல் விமானநிலையத்தில் குவிந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு வெளியேற போராடி வருகின்றனர். பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.