ஆப்கான் பெண்கள் 6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தலிபான் அரசின் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான பெண்கள் மட்டும் இனி பள்ளிக்குச் சென்று படிக்க அனுமதிக்கப்படுவார்கள்.


இதை அடுத்து தலிபான் கல்வித்துறை, ஆறாம் வகுப்புக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்வி மையங்களை திறக்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.




ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் பெண்களின் கல்வியை ஒடுக்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது. உயர்கல்வி அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து உத்தரவிட்டது, இதை அடுத்து இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்தின் கண்டனத்தைப் பெற்றது.


பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகளை மதிக்கும் மிகவும் மிதமான ஆட்சியை வழங்குவோம் என தாலிபன் தொடக்கத்தில் உறுதியளித்த போதிலும், அவர்கள் கடந்த ஆகஸ்ட் 2021-ஆம் ஆண்டில் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இஸ்லாமிய சட்டத்தின் நடைமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்தி வருகின்றனர். 






இதையடுத்து அவர்கள் நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பெண்கள் கல்வி பெறுவதைத் தடை செய்தனர், பெரும்பாலான வேலைகளில் இருந்து பெண்களைத் தடை செய்தனர், மேலும் பொது இடங்களில் தலை முதல் கால் வரை ஆடைகளை அணிய உத்தரவிட்டனர். பெண்கள் பூங்காக்கள் மற்றும் ஜிம்களில் இருந்தும் தடை செய்யப்பட்டனர் மற்றும் ஆண் உறவினர் இல்லாமல் வெளியே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆண் மருத்துவர்களை பெண்கள் சந்திப்பதும் த்டை செய்யப்பட்டது.


மனித உரிமைகள் கண்காணிப்பகம் தாலிபனின் இந்த நடவடிக்கையை "வெட்கக்கேடான முடிவு" என்று சாடியுள்ளது. இது ஆப்கானியர்களின் அடிப்படை உரிமைகளை தலிபான்கள் அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளது.


கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.