ஒரு பெரிய அளவிலான கழிவு மேலாண்மை தொழில்நுட்ப சோதனை வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (International Space Station) கிட்டத்தட்ட 78 கிலோகிராம் அளவிலான குப்பை அகற்றப்பட்டது. நிலையத்தின் கமர்ஷியல் பிஷப் ஏர்லாக்கில் இருந்து குப்பைகள் அடங்கிய அந்தப் பை ஜெட் வேகத்தில் அகற்றப்பட்டது.


நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் மற்றும் நானோராக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் கழிவுகளை அகற்றுவதற்கான முதல் வகையான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.


"இந்தத் தொழில்நுட்பம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான மிகவும் திறமையான மற்றும் நிலையான மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து கமர்ஷியல் விண்வெளி நிலையங்களுக்கும் ஒரு முக்கியமான முன்மாதிரியாக இந்தச் புதிய செயல்பாடு மற்றும் பயன்பாடு இருக்கும்" என்று நானோராக்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.






இதுவரை விண்வெளி வீரர்கள் குப்பைகளை விண்வெளி நிலையத்தில் சேமித்து சிக்னஸ் சரக்கு வாகனத்தில் பூமிக்கு அனுப்பி வந்தனர். சிக்னஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதன் முதன்மைப் பணியை முடித்த பிறகு, விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திலிருந்து டி-ஆர்பிட்டிற்காக வெளியிடுவதற்கு முன்பு,அந்த  விண்கலத்தை குப்பைப் பைகளால் நிரப்புவார்கள், அங்கு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் முழு விண்கலமும் எரிக்கப்படுகிறது.


"இது பிஷப் ஏர்லாக்கின் முதல் திறந்து மூடும் சுழற்சியாகும், இது எங்கள் முதல் முயற்சி, மேலும் புதிய மற்றும் மிகவும் நிலையான கழிவு அகற்றல் நடவடிக்கைகளின் தொடக்கமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று நானோராக்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அமேலா வில்சன் கூறினார்"