அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வழக்கறிஞராக உள்ள சுரேந்திரன் கே. படேல், சிறு வயதில் வறுமையில் வாடியவர். ஆனால், தொடர் உழைப்பின் காரணமாக தற்போது அமெரிக்காவில் நீதிபதியாக உயர்ந்துள்ளார்.
டெக்சாஸின் ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் அமைந்துள்ள 240வது மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக 51 வயதான அவர் ஜனவரி 1 ஆம் தேதி பதவியேற்றார்.
கேரளாவின் காசர்கோட்டில் தினசரி கூலித் தொழிலாளிகளுக்குப் பிறந்து அவர்களுக்கு உதவுவதற்காக பள்ளி மற்றும் கல்லூரியில் பணியாற்றியவர் பட்டேல். ஆனால், தற்போது இவர் நிகழ்த்திய சாதனை அனைவரையும் வியக்க வைக்கிறது.
பதின்ம வயதில், இவரும் இவரது சகோதரியும் பணம் சம்பாதிப்பதற்காக பீடி இலையை சுருட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தொழிலாளியாகவும் வேலை செய்துள்ளார்.
வறுமையின் காரணமாக, 10ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்து, முழு நேரமாக பீடி உருட்டும் பணியை தொடங்கினார்.
பின்னர், ஈ.கே. நாயனார் நினைவு அரசுக் கல்லூரியில் படேல் சேர்ந்தார். ஆனாலும், தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது. கல்லூரிக்கு போதுமான வருகை இல்லாததால் பேராசிரியர்கள் அவரை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
ஒரு காலத்தில் படிப்பை தொடர வேண்டாம் என எண்ணிய படேல், பிறகு ஒரு வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். மேலும் தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு தனது ஆசிரியர்களிடம் கெஞ்சினார்.
தனது வாழ்க்கை அனுபவம் குறித்து The Week செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்ட படேல், "நான் நல்ல மதிப்பெண்களை எடுக்கவில்லை என்றால் படிப்பை விட்டுவிடுகிறேன் என ஆசிரியரிடம் சொன்னேன். ஆனால், முடிவுகள் வந்ததும் நான் அதிக மதிப்பெண்களை எடுத்திருந்தேன்.
எனவே, அடுத்த ஆண்டு, அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர். நான் கல்லூரியிலும் முதலிடம் பெற்றேன். கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிக்க விரும்பினேன். ஆனால், பொருளாதார நிலை ஒத்துழைக்கவில்லை. எனது முதல் ஆண்டில், எனது நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அதன் பிறகு, ஒரு ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்குச் சேர்ந்தேன்.
1995 இல் சட்டப் பட்டம் பெற்றேன். 1996 ஆம் ஆண்டு கேரளாவின் ஹோஸ்துர்க்கில் வழக்கறிஞராக பணி செய்யத் தொடங்கினேன். படிப்படியாக பிரபல வழக்கறிஞரானேன்.
ஏறக்குறைய, 10 ஆண்டுகளுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்ய தொடங்கினேன். 2007 ஆம் ஆண்டு எனது குடும்பத்திற்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, வாழ்க்கையே மாறிவிட்டது" என்றார்.