Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Landed on Earth: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.

Sunita Williams Landed on Earth: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பூமிக்கு திரும்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்:
விண்வெளியில் ஒன்பது மாத கடினமான காத்திருப்புக்குப் பிறகு, நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து நீண்ட மற்றும் திட்டமிடப்படாத பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர். ஃபுளோரிடாவில் உள்ள கடற்கரையில், அவர்களது விண்கலம் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தரையிறங்கியது.
புன்னகைத்த சுனிதா:
கடலில் தரையிறங்கிய விண்கலத்தை நாசா அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டு, உரிய பரிசோதனைக்கு பிறகு அதனை திறந்தனர். முதலில் உள்ளே இருந்த 4 பேரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு முதலாவதாக நிக் ஹே மற்றும் அவரது உதவியாளர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அடுத்தடுத்து வெளியே வந்து, மகிழ்ச்சியுடன் கையசைத்து சிரித்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
விண்வெளியில் சுனிதா செய்தது என்ன?
எதிர்பாராத விதமாக நீண்ட காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபோது, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பல முக்கியமான ஆராய்ச்சியை விண்வெளியில் தொடர்ந்தனர். அதன்படி, பின்வருவனவற்றில் சோதனைகளை மேற்கொண்டனர்:
• தாவர நீர் மேலாண்மை
• காய்கறி உற்பத்தி
• விண்வெளி மருத்துவம்
• ரோபாட்டிக்ஸ்
• உயிர் ஆதரவு அமைப்புகள்
நிலையத்தைப் பராமரிப்பதிலும், சக பணியாளர்களுக்கு அன்றாட நடவடிக்கைகளில் உதவுவதிலும், தொழில்நுட்பச் சிக்கல்களைச் சரிசெய்வதிலும் சுனிதா மற்றும் வில்மோர் முக்கியப் பங்காற்றினர். நாசாவின் எதிர்கால ஆழமான விண்வெளி ஆய்வுத் திட்டங்களின் இன்றியமையாத அங்கமான நீண்டகால பயணங்களின் சவால்கள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இவர்களின் அனுபவங்கள் வழங்கின.
9 மாத காத்திருப்பு ஏன்?
ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம், வெறும் எட்டு நாள் பயணமாகத் திட்டமிடப்பட்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் பயணம், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எதிர்பாராத விதமாக நீட்டிக்கப்பட்டது. எதிர்பாராத பூஸ்டர் சிஸ்டம் தோல்விகள் மற்றும் டாக்கிங் சிக்கல்கள் இருவரையும் சிக்கித் தவிக்க வைத்தன. இதனால் நாசா மற்றும் போயிங் நிறுவனம், 2 பேரையும் பூமிக்கு அழைத்து வர புதிய திட்டமிடல்களை மேற்கொண்டன. சவாலானதாக இருந்தாலும், விண்வெளியில் அவர்கள் நீண்ட காலம் தங்கியிருப்பது நுண் ஈர்ப்பு விசையில் நீட்டிக்கப்பட்ட மனித வாழ்விடம் குறித்த தொடர்ச்சியான ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.
17 மணி நேர பயணம்:
பாதுகாப்பு காரணங்களுக்காக பலமுறை தாமதமான aவர்களது பூமிக்கு திரும்பும் பயணம், விண்கலத்தின் அமைப்புகளை உன்னிப்பாக மதிப்பிட்ட பிறகு இறுதியாக தொடங்கியது.
மார்ச் 18 அன்று வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் உள்ளிட்ட 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது, மேலும் 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு, அது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து, ஃபுளோரிடா கடற்கரையில் பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது. மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவார்கள்.