Sunita Williams: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவருடன் பயணம் செய்த சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இதனால் 8 நாள் பயணமானது 8 மாதங்களுக்கு மேலாக நீடித்துள்ளது. 


சர்வதேச விண்வெளி நிலையம்:


கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம், விண்வெளி பயணங்களுக்கான சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான , இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். எளிமையாக சொல்ல வேண்டாம் என்றால் (மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஸ்டார்லைனர் விண்கலத்தை சோதனை செய்ய )




ஏறக்குறைய எட்டு நாட்கள் என்று முதலில் இவர்களது பயணமானது திட்டமிடப்பட்டது. ஆனால், அவர்கள் சென்ற போயிங் விண்கலத்தில் உந்தி தள்ளும் அமைப்பில் உள்ள சிக்கல்கள், எரிபொருள் கசிவு உள்ளிட்டவை காரணமாக, பூமி திரும்புவதில் காலமானது நீட்டிக்கப்பட்டது.


இதையடுத்து, பிரச்னைகளை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா அவசரமாக தீவிர முயற்சித்து வருகின்றன.


2025ல் பூமி திரும்பும் வீரர்கள்:


இந்நிலையில், நாசா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், 2 விண்வெளி வீரர்களும், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் என தெரிவித்துள்ளது. மேலும் , அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் தனியாக பூமி திரும்பும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்களுக்கு விண்வெளி வீரர்களின் பாதுகாப்பானது, மிகவும் முக்கியம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.




எதில் திரும்புகிறார்கள்?:


சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 விண்வெளி வீரர்களும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரூ டிராகன் விண்கலம் மூலம் அழைத்தவர திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 4 பேர் பயணிக்க கூடிய விண்கலத்தில் 2 பேர் பூமியிலிருந்து புறப்பட்டு, திரும்பி வரும்போது 2 பேரையும் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய திட்டத்தின் கீழ், ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் செப்டம்பர் மாதத்தில் பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






சிக்கலில் போயிங்:


விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதில், முக்கிய தனியார் நிறுவனங்களாக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் உள்ளன. இதற்கான பயணத்தை ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கிவிட்டது, ஆனால் சோதனை ஓட்டத்திலே போயிங் நிறுவனம் உள்ளது. சமீபத்தில் பயணத்தில் சுனிதா, விட்ச் மோர் சென்றாலும், பழுதின் காரணமாக , போயிங் நிறுவனத்தின் போட்டியாளரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் திரும்பி வர திட்டமிடப்பட்டுள்ளதால், போயிங் முழுமையான வெற்றியடையவில்லை என்பதால் பின்னடைவை சந்தித்துள்ளது.


இந்நிலையில், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 2 விண்வெளி வீரர்களும் எலான் மஸ்க்கின் க்ரூ டிராகன் விண்கலத்தின் மூலமாக அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.