தற்கொலைக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு இடம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இங்கு தற்கொலை செய்து கொள்வதற்கென்றே ஆண்டு தோறும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்கின்றனர். அது மட்டுமின்றி அதனை இயக்க அந்நாட்டு அரசு பெரிதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது கூடுதல் ஆச்சரியம்….


டிக்னிடாஸ் தற்கொலை உதவி மையம்:


சுவிட்சர்லாந்தில் டிக்னிடாஸ் என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. தீரா நோயினால் பாதிக்கப்படுவோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உயிரிழக்க விரும்பினால் இங்கே அதற்கு உதவியளிக்கப்படுகிறது. ‘கண்ணியத்துடன் வாழ்ந்து, கண்ணியத்துடன் இறக்க வேண்டும்’ என்பதை மையப்பொருளாக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது.  


சுவிஸ் வழக்கிறிஞர், லுட்விக் ஏ மினெல்லி என்பவரால் சூரிச் (Zurich) நகரில் 1998ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. லுட்விக், வழக்கிறிஞர் என்பதைத் தாண்டி  ஐரோப்பிய மாநாட்டிற்கான சுவிஸ் சொசைட்டியின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிரந்திரமாக நோய்வாய்ப்பட்டு வாழ்வில் தினம் தினம் துன்பத்தை சந்திப்போரின் வலியை நீக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிறுவனத்தை இவர் தொடங்கியுள்ளார். 




 


யார் யாருக்கு இங்கே அனுமதி?


 டிக்னிடாசை தொடர்பு கொள்வோர் பெரும்பாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக  வாழப்பிடிக்காமல் உள்ளவர்கள் தான் என அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் இங்கே அனுமதியளிக்கப்படுவதில்லை.


தீரா உடல் நோய்களினால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்கள், பக்கவாதம், பார்கின்சன்ஸ் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் இங்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்நிறுவனம், இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள உதவியுள்ளது.


Also Read| பேச்சுவாக்குல சம்பள விவரத்தை வெளியே சொன்ன பெண்! வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்!


தற்கொலைக்கு உதவி :


டிக்னிடாஸில் உயிரிழக்க விரும்புவோர், அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழை டிக்னிடாஸிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர அவர்கள் இறக்க விரும்பும் காரணத்தை தங்கள் கைப்பட எழுதி ஒரு கடிதமாக சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி அவர்களால் கடிதம் எழுத முடியாத நிலை இருப்பின், யாருடைய வற்புறுத்தலுமின்றி தன் சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி பதிவு செய்த வீடியோவை டிக்னிடாஸிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள்  மற்றும் ஆதாரங்கள், பிற்காலத்தில் சட்ட சிக்கல்கள் எழாமலிருக்க உதவுவதாக டிக்னிடாஸ் தெரிவிக்கறது. 


நோயாளிகள், assisted suicide எனப்படும் தற்கொலைக்கு உதவும் முறையில் இறக்கத் தயாராக இருக்கிறார்களோ இல்லையா என பல முறை கேட்கப்படுகிறது. மேலும்,  இது குறித்து பரிசீலிக்க நேரம் வேண்டுமா என்றும் கேட்கப்படுகிறது. அவர்கள் மனம் மாறி இறக்க விருப்பமில்லை என்று தெரிவித்தால் உடனடியாக இதில் இருந்து விலக்கப்படுகிறார்கள்.


தற்கொலைகளுக்கு உதவ டிக்னிடாஸ் பின்பற்றி வரும் முறை:


டிக்னிடாஸின் தற்கொலைக்கு உதவும் முறையில் உயிரிழக்க விரும்பும் நபர்,  அதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு அவர்களை டிக்னிடாஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்வர். அதன் பின்னர் மூன்றிலிருந்து நான்கு மாத கால இடைவெளியில் தொடர்பு கொண்ட நோயாளி இறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 


இதைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட நாளில், சம்பந்தப்பட்ட நபர் டிக்னிடாசிற்கு வரவழைக்கப்படுவார். முதலில் அவருக்கு குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்கும் antiemetic drug எனப்படும் மருந்து, வாய் வழியே கொடுக்கப்படுகிறது. பின்னர், அரைமணி நேரம் கழித்து Pentobarbital எனப்படும் மயக்கமருந்து பதினைந்து கிராம் அளவிற்கு தண்ணீரில் கலக்கப்பட்டு உரியவருக்கு அளிக்கப்படுகிறது. 




அதன் பிறகு மூன்று அல்லது ஐந்து நிமிடங்களில் நோயாளி மயக்க நிலைக்கு சென்று விடுவார். பின்னர் நோயாளிக்கு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.  இது உடலில் உள்ள மத்திய நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்து நோயாளியை கோமா நிலைக்கு எடுத்துச் செல்லும். பின்னர் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களுக்குள் நோயாளி உயிரிழந்து விடுவார். டிக்னிடாஸ் பின்பற்றி வரும் இந்த முறையினால், நோயாளி எந்தவித வலியுணர்வுமின்றி உயிரிழக்க முடியுமென்று நம்பப்படுகிறது. இவையணைத்தும் நிகழும் போது உயிரிழக்கும் நோயாளி விரும்பினால் அவருடைய உறவினரோ நண்பரோ உடன் இருக்கலாம். இப்படி ஒருவரின் தற்கொலைக்கு உதவ டிக்னிடாஸ் , சுமார் பத்தாயிரம் சுவிஸ் கரன்சி வரை கட்டணமாக வசூலிக்கிறதாம்!


இவர்கள் செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறி  பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இதனால், இந்த அமைப்பு தற்போது பெயர் வெளியிடப்படாத ஒரு இடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. 


இது மட்டுமின்றி, பொது வாழ்வில் தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் அவர்களை அப்படிப்பட்ட எண்ணங்களிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளையும் டிக்னிடாஸ் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.