(RTS,S/ASO1 (RTS.S) அல்லது Mosquirix (அதன் விற்பனை பெயர்) என்று சொல்லப்படுகின்ற மலேரியா தொற்று நோய்க்கு எதிரான முதல் தடுப்பு மருந்தை  உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.     


இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "Mosquirix தடுப்பு மருந்து பிளாஸ்மோடியம் பால்சிபரும் பாராசைட்டுக்கு எதிராக செயல்திறன் மிக்க பாதுகாப்பான மருத்துவத் தீர்வாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்ட  தடுப்பு மருந்து பரிசோதனை மூலம் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தது நான்கு டோஸ்கள் பெற்றுக் கொண்ட 10 குழந்தைகளில் குறைந்தது 4 பேருக்கு மலேரியா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கின்றனர்" என்று தெரிவித்திள்ளது. 


மலேரியா தொற்று நோய்: மலேரியா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொசுவின் மூலம் பரவும் தொற்று நோயாகும். இது பிளாஸ்மோடியம் விவியாக்ஸ் (Plasmodium viviax -P. vivax), பிளாஸ்மோடியம் ஃபால்சிபரும் (Plasmodium falciparum-P. falciparum), பிளாஸ்மோடியம் மலேரியே (Plasmodium malariae-P. malariae) பிளாஸ்மோடியம் ஓவேல் (Plasmodium ovale-P. ovale) ஆகிய பாரசைட்டுகளால் ஏற்படுகின்றன. 


மனிதர்களுக்கு மலேரியாவைப் பரப்பும் இரு வகை ஒட்டுண்ணிகள் இந்தியாவில் பரவலாக அறியப்படுகின்றன (பிளாஸ்மோடியம் விவாக்ஸ், பிளாஸ்மோடியம்: பால்சிபரும்). பாரசைட்டைக் கொண்ட பெண் அனஃபெலஸ் இனக் கொசு கடிக்கும் போது, எச்சிலின் மூலமாக ப்ரொடிஸ்டா (விலங்கு-தாவர ஓரணு உயிர்) இரத்த ஒட்டத்தில் செலுத்தப்படுகிறது, இப் ப்ரொடிஸ்டா கல்லீரலை அடைந்து வளர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. மலேரியா நோயின் அறிகுறிகளில் பொதுவாகக் காய்ச்சலும் தலைவலியும் இடம்பெற்று இருக்கும். கடுமையான நேர்வுகளில் இது ஆழ்மயக்கம் அல்லது மரணத்தில் முடியும். 



பொது சுகாதார பிரச்னை:  தொற்று நோய்களில் மிகவும் அபாயகரமானது மலேரியா. இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நிமோனியா, டயோரியா நோய்களுக்குப் பிறகு அதிகமான குழந்தைகள் இந்த நோயின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.


ஆப்ரிக்காவில் மலேரியா: ஆப்ரிக்காவின் சகாராவைச் சார்ந்த பெரும் பகுதியையும் ஆசியாவையும் உள்ளடக்கிய பூமத்திய ரேகைச் சுற்றியுள்ள அகன்ற பட்டையான வெப்பம் மற்றும் அரைவெப்ப மண்டலப்பகுதியில்  (Tropical and Sub Tropical Regions) இந்த நோய் சற்று பரவலாக காணப்படுகிறது.  




இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். உலக 2016 ல் மட்டும் மலேரியா நோய்த் தொற்று காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 300,000 ஆக இருந்தது. அதாவது, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 800 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.  2019ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 229 மில்லியன் ஆகவும், உயிரிழப்பு 409,000 ஆகவும் இருந்தது. இதில், 94% உயிரிழப்புகள் சப்-சஹாரா ஆப்பிரிக்கா பகுதியில் நிகழ்கிறது.


இந்தியாவில் மலேரியா:  இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மலேரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மலேரியா பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா. மேலும், இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. 2019ம் ஆண்டு மலேரியா பாதிப்பு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் (3,38,494 பாதிப்பு, 77 உயிரிழப்பு) குறைந்துள்ளது.


2017 முதல் 2022 வரையிலான மலேரிய ஒழிப்புக்கான தேசிய உத்தி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது என்றும்,  இதன் காரணமாக முதல் 2 ஆண்டுகளுக்கு, உயிரிழப்பு 27.7 சதவீதம் மற்றும் 49.5 சதவீதம் குறைந்தது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.