இலங்கையில் இந்திய அரசின் எண்ணெய் சேமிப்புக் கிடங்காகச் செயல்பட்டு வந்த சுமார் 99 கிணறுகளைத் திரும்பப் பெறுவதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசுடன் இலங்கை அரசு 16 மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. இதனை இலங்கை அரசின் எரிசக்தித் துறை அமைச்சர் உதய் கம்மன்பில் தெரிவித்துள்ளார். திரிகோணமலை எண்ணெய்ப் பண்ணை திட்டம் எனப் பெயரிடப்பட்ட இந்த 35 ஆண்டுகாலத் திட்டம் இதன்மூலம் முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 




ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர்கள் கப்பல்களுக்கான எரிசக்தி தேவைக்காக எண்ணெய் கிணறுகளை அமைத்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எரிசக்தித் தேவைக்காக இந்தக் கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் கடந்த 2003ல் இந்த எண்ணெய்க் கிணறுகளைப் பராமரிக்க இலங்கை அரசு இந்தியாவுடன் நல்லெண்ண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தக் கிணறுகளைப் பராமரிக்கப் பலகோடி ரூபாய்கள் ஆகும் என்பதால் அந்த அரசு இந்த முடிவை எடுத்தது. 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எண்ணெய்க் கிணறுகள் போதிய அளவில் பராமரிக்கப்படாத சூழலே நிலவி வருவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருந்தும் இந்தக் கிணறுகளை உபயோகிக்க வருடாந்திரமாக இந்திய அரசு இலங்கைக்கு 75 லட்சம் ரூபாய் பணம் செலுத்துவருகிறது.இதற்கிடையேதான் கிணறுகளைத் தாங்களே பராமரித்துக் கொள்ளும் முடிவுக்கு இலங்கை அரசு வந்ததாகத் தெரிகிறது. 


இதையடுத்து கடந்த 16 மாதங்களாக கிணறுகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சு வார்த்தையில் இரண்டு நாட்டு அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பேச்சு வார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 


இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் அந்த நாட்டின் உள்ளூர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியின் தொகுப்பு கீழே...






இதுகுறித்துப் பேசியுள்ள உதய் கம்மன்பில், ‘இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே திரிகோணமலை எண்ணெய் கிடங்கைப் பராமரிக்க தனிக்குழு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.அதற்கான முதற்க்ட்ட நடவடிக்கையாக இந்தியாவிடமிருந்து எண்ணெய் கிணறுகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.விரைவில் சாதகமான பதிலை இந்தியா அளிக்கும் என நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.