இலங்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்..
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.இந்நிலையில் அந்நாட்டுக்கு வருமானத்தை பெற்று கொடுக்கக்கூடிய ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது .என்னதான் பிரச்சனை அங்கிருந்தாலும் தற்போது விமான சேவைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி சென்ற வண்ணம் இருக்கின்றனர் .
உலக நாடுகள் எச்சரித்தபோதும் மக்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவில்லை .இந்நிலையில் இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் பலர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்து வெளியிட்டிருக்கின்றன. தற்போது சுமார் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 136 நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் இலங்கையில் தங்கி இருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. 2009 இறுதி யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசால் முதன் முதலில் செய்யப்பட்ட அபிவிருத்திதான் இந்த சுற்றுலாத்துறை .
இதனை அடுத்து இலங்கையின் பல பாகங்களிலும் இந்த களியாட்ட விடுதிகள் மற்றும் ரெஸ்டாரன்ட் விரிவாக்கம் இடம்பெற்றன.இதனை தொடர்ந்து தான் இலங்கையில் ஒரு பக்கம் அபிவிருத்தி என்றாலும் ஒரு பக்கம் அந்நாட்டு மக்கள் கலாச்சார சீரழிவை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தற்போது கலாச்சார சீரழிவு என்பது இலங்கையில் தலைவிரித்தாட தொடங்கி இருக்கிறது.
இலங்கையின் இளைஞர் ,யுவதிகள் போதைப் பொருள் பாலியல் தொழில் என பல முறையற்ற விஷயங்களுக்கு அடிமையாகி , நவீனத்துவம் என்ற பெயரில் தமது வாழ்வையே இழந்து, குடும்பங்களை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர் எனவும் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது என்ற பெயரில் ,நாட்டில் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் களியாட்ட விடுதிகளை திறந்தது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.
தற்போது இலங்கையில் இந்தியாவைச் சேர்ந்த 2,569 சுற்றுலா பயணிகள் இருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் கனடாவில் இருந்து 2,295 பேர்,அவுஸ்திரேலியாவில் இருந்து 1,785 பேர், லண்டனில் இருந்து 2,397 சுற்றுலாப் பயணிகள் அங்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பிரான்சில் இருந்து 1,310 பேர்,அமெரிக்காவிலிருந்து 1,379 பேர்,ஜெர்மனியில் இருந்து 1,883 நபர்கள்,ரஷ்யாவில் இருந்து 1,392 சுற்றுலா பயணிகள் இலங்கையில் உள்ளனர்.இலங்கைக்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள் குறிப்பாக இலங்கையின் கரையோரத்தை அண்மித்த திருகோணமலை யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு, அம்பாறை ,காலி மாத்தறை பகுதிகள் மற்றும் இலங்கையின் மலைகள் நிறைந்த பகுதியான நுவரெலியா ,ஹட்டன் கண்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களிலும் தங்கி உள்ளனர்.
தற்போது இலங்கையில் தங்கியுள்ள இந்த 22 ஆயிரம் சுற்றுலா பயணிகளை தேடிப் பிடித்து அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து இருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இலங்கையில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக தமது நாடுகளுக்கு திரும்பும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.மேலும் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
நேரத்துக்கு விமான நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரங்களில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.விமான நிலையத்திற்கு திரும்பச் செல்ல வாகனங்களில் போதுமான எரிபொருள் இல்லாமையினால் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கிய சம்பவங்கள் அங்கு பதிவாகி இருந்தன .அதேபோல் இலங்கை சென்ற சுற்றுலா பயணிகள் மீண்டும் தமது நாட்டுகளுக்கு திரும்பும் நிலையில் இவ்வாறான அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியில், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்த வருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி துறை தெரிவித்திருக்கிறது.அண்மையில் கொழும்பு மற்றும் காலி,கலேவெல, தலகிரியாகம போன்ற பகுதிகளில் இருந்து விமான நிலையம் திரும்பிய ரஷ்யாவை சேர்ந்த தம்பதியினர் உள்ளிட்ட பல சுற்றுலா பயணிகள் எரிபொருள் பற்றாக்குறையால் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
இவர்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கியதும், சிலருக்கு எரிபொருள் இல்லாமல் நேரத்துக்கு விமான நிலையம் செல்ல முடியாமல் தத்தளித்து நடுரோட்டில் நின்ற சம்பவங்கள் பதிவாகி இருந்தனஇதனை அடுத்து சில எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகள் உதவி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விமான நிலையங்களை நோக்கி செல்லும் போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.பலர் கைகளில் எரிபொருட்களுடன் விமான நிலையம் சென்ற சம்பவங்களும் பதிவாகி உள்ளன.அங்கு உள்நாட்டு மக்கள் அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையில் எந்த வகையிலான வசதிகளை செய்து கொடுத்திருப்பார்கள் என்பது தெரியவில்லை .
இருந்தபோதும் இந்தத்துறையை நம்பித்தான் இலங்கை பல்வேறுவிதமான அபிவிருத்தி திட்டங்களை, கோடியிலிருந்து மில்லியன், பில்லியன் வரை கடன் வாங்கி முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் , அங்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு சரியான பின்னர் செல்வதே சிறந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.