நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்:
இலங்கையில் பொதுமக்கள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில் அதிகாரிகள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல் ஆர்ப்பாட்டங்களின் போதும் ,வன்முறையை தடுக்கும் நடவடிக்கையின் போதும் அதிகாரிகள் யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு செயலாற்ற வேண்டுமென ஐநா மனித உரிமை ஆணைய பேச்சாளர் ரவீனா சம்டசானி தெரிவித்திருக்கிறார்.
மருத்துவ சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்:
ஆர்ப்பாட்டங்களை முன் நின்று நடத்துவோர் மற்றும் அதற்கான ஆதரவாளர்களையும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவசர மருத்துவ சேவை மற்றும் மனிதாபிமான சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கண்ணீர் புகை தாக்குதலை குறிப்பிட்டு ஐநா மனித உரிமை ஆணையம் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகை பிரயோகம், தண்ணீரை அடித்து கலைத்தல் போன்ற அளவுக்கு அதிகமான விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் ராணுவத்தினரும் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு உள்ளதாகவும், அவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
பத்திரிகையாளர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்:
முக்கியமாக இலங்கை மக்களுக்கு கருத்து சுதந்திரம், அமைதி வழி போராட்டங்கள், பொது நிகழ்வுகளில் பங்கு பெற உரிமையுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கும் ,மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஆர்ப்பாட்டங்களின் போது செய்திகளை அறிக்கையிட உரிமையுள்ளது என ஐநா மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிறது. ஆகவே பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தமது கடமைகளை செய்யும் போது இடையூறு செய்யாமல் பாதுகாப்பளிக்க வேண்டும் எனவும் , அது குறித்து இலங்கை ராணுவத்தினருக்கு தெளிவான விளக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் ஐநா மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ராணுவத்தை பயன்படுத்த கூடாது:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக அங்கு பதற்ற நிலைமை தீவிரமடைந்திருப்பதாக ஐநா மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரம் அதாவது பல நாட்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மளிகை கடைகளிலும் பரிதவித்து வருவதாக ஐநா மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள், போலீசார் படையினர் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அவை குறித்த தகவல்கள் பெறப்பட்டிருப்பதாகவும் ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இருந்த போதிலும் இலங்கையில் போலீசாரும் ,ராணுவத்தினரும் எதிர்நோக்கும் சவால்களை தாங்கள் அறிந்திருப்பதாகவும் ஐநா மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. இவர்கள் ,பொதுமக்கள் தொடர்பான விவகாரங்களை கையாளும்போது ,வன்முறைகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்பட அரசு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் ஐநா மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் பகுதிகளில் ,அமைதியை நிலை நாட்ட ராணுவத்தை பயன்படுத்த கூடாது என்பது பொதுவான விதியாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. அவசர காலங்களில் ராணுவத்தினர் சட்டத்தை கையில் எடுத்தால் அவர்கள் பொறுப்பு கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
போராட உரிமை இருக்கிறது:
இலங்கை மக்கள் தமது உரிமைக்காக போராடுவதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரமும் இருக்கிறது என ஐநா மனித உரிமை ஆணைய பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் அதிக அளவிலான துன்பத்தினை அனுபவித்து வருவதாகவும், உணவு, சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி அவர்கள் வாழ்வின் நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் ஐநா மனித உரிமை ஆணையப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டு வரவும், தமக்கான வாழ்வாதாரத்தை சிறந்த முறையில் பெறவும் ,அமைதியான விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் உரிமையுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே மக்களின் துயரங்களை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வை நேர்மையான பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் என மீண்டும் தாம் வலியுறுத்துவதாக ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது.