நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.
நிஜ்ஜார் கொலை வழக்கு:
காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கனடாவில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அதிகாரிகளின் பங்கு இருப்பதாகவும், இதுதொடர்பான விசாரணைக்கு அந்நாட்டு அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த இந்திய அரசு, கனடாவிற்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை முறைப்படி நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
விசாரணைக்கு ஒத்துழைக்க அமெரிக்கா வலியுறுத்தல்:
நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் விசாரணை தொடர வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “ கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். எங்கள் கனடா நண்பர்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். கனடாவின் விசாரணை தொடர்வதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் நாங்கள் பகிரங்கமாகவும் மற்றும் தனிப்பட்ட முறையிலும் - கனடா விசாரணையில் ஒத்துழைக்குமாறும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்” என கூறினார்.
போட்டுக் கொடுத்த அமெரிக்கா:
ஏற்கனவே நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்புடையதாக நட்பு நாடுகளின், உளவுத்துறை அமைப்புகளும் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தான் கூறினேன் என கனடா பிரதமர் ட்ரூடோ கூறியிருந்தார். இதனிடையே, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடாவிற்கு உளவுத்தகவல் கொடுத்ததே அமெரிக்கா தான் என, அந்நாட்டின் பிரபல நாளேடு அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில், தற்போது தான் இந்தியா உடன் நல்ல உறவை அமெரிக்கா மேம்படுத்தி வருவதால், கனடாவிற்கு உளவுத்தகவல் கொடுத்ததை பைடன் அரசு மறைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணியாக உள்ள அமெரிக்கா, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவும் இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
முட்டிக் கொள்ளும் இந்தியா - கனடா:
இதனிடையே, நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா - கனடா அரசுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இருநாடுகளின் தூதரக மூத்த அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, விசா வழங்கும் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகள் தொடர்பான போதிய ஆதாரங்களை வழங்கிவிட்டதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. சேர்ந்து பணியாற்றவும் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேநேரம், கனடா தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, கனடாவில் உள்ள இந்துக்கள் மிரட்டப்படுவதாகவும், கோயில்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் பேசியிருந்தார். ஆனால், அப்படியான நிலை எதுவும் கனடாவில் இல்லை என, அங்கு வாழும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.