இலங்கை சமீப ஆண்டுகளாகவே பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது.  வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வருவாயில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கியுள்ளது. தொழிற்துறைகள் பாதிப்படைந்து ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்நியச்செலாவணி இருப்பு குறைந்துள்ளதால் இலங்கையின் ரூபாய் மதிப்பு சரிந்துக் கொண்டே செல்கிறது. அந்நிய செலவணியின் இருப்பு குறைவின் காரணமாக இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


இயற்கை விவசாய கொள்கை: 


கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் ரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டு இயற்கை விவசாயத்தை  மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என ராஜபக்சே அரசு உத்தரவு பிறப்பித்தது. 
 இலங்கை விவசாயிகள், பெரும்பாலும் ரசாயன உரங்களைப் போட்டுத்தான் விவசாயம் செய்து வந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.  திடீரென ஒரே இரவில் ஆர்கானிக் உரங்களுக்கு மாறுவது பொருட்களின் உற்பத்தியை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்தனர். விவசாயிகள் பயந்தது போலவே போதுமான உற்பத்தியை விவசாயிகளால் செய்ய முடியவில்லை. இதனால் விவசாயத்துறையும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் தட்டுப்பாட்டிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.


 


சரிந்த இறக்குமதி:  



இலங்கையில் தொழிற்சாலைகள் முதல் விவசாயம் வரை மூலப்பொருள்களுக்கு இறக்குமதியைத்தான் நம்பியுள்ளன. பொருளாதாரம் நலிவடைந்துள்ள சூழலில் அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறக்குமதி குறைந்து, உணவு பொருட்களின் இருப்பு குறைந்துள்ள சூழலில் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றை  அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் வானளவு உயர்ந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்று மிகவும் மோசமான உணவுப் பஞ்சத்தை இலங்கை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். 


பொருளாதார அவசர நிலை: 


இந்நிலையில் உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் அங்கு பொருளாதார அவசர நிலையை  அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார்.  அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சரியான விலையில் விற்பதை ராணுவம் மேற்பார்வையிடும் என்றும், உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. 


முன்னதாக, அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டால் அது இராணுவ ஆட்சிக்கு அது வழிவகுக்கும் என அங்குள்ள எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.