உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நோய் தொற்று மிகவும் அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன. எனினும் இந்த நோய் பரவல் தன்மையை கடுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் தங்களுடைய மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் மாடெர்னா தடுப்பூசி, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் பயன்படுத்தப்பட்டு தூக்கி போடப்பட்ட கொரோனா தடுப்பூசி குப்பிகளை வைத்து ஒரு அலங்கார விளக்கை தயாரித்துள்ளார். இந்த விளக்கு தொடர்பாக அந்த செவிலியர் பணியாற்றும் மருத்துவமனை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளது. அதன்படி பௌல்டர் கவுண்டி பொது சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் லாரா வெஸ் என்ற செவிலியர் இந்த அலங்கார விளக்கை செய்துள்ளார். 




இந்த விளக்கு தொடர்பான படத்தை பகிர்ந்துள்ள அந்த மருத்துவமனை, "எங்களுடைய மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் தன்னுடைய சிறப்பான கலை திறனை வெளிப்படுத்தியுள்ளார்" எனப் பதிவிட்டுள்ளது. மேலும் அந்தப் பதிவில் செவிலியர் லாரா வெஸ் எதற்காக இந்த அலங்கார விளக்கை கொரோனா தடுப்பூசி குப்பிகளை வைத்து செய்தார் என்பதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளது. அதில் லாரா வெஸ், "பௌல்டர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிற போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகிய அனைவரின் சிறப்பான பணியையும் நான் பார்த்தேன்.


 



அத்துடன் உயிருக்கு ஆபத்தான இந்த இக்கட்டான நேரத்திலும் இவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது. மேலும் அவர்களுடன் சேர்ந்து சரியான நேரத்தில் கொரோனா தடுப்பூசியை தயாரித்து மக்களின் உயிரை காத்தவர்களின் பங்கும் பாராட்டுதலுக்கு உரியது. கொரோனா நோய் தொற்று எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம். எனவே இத்தனை இழப்புகள் மற்றும் நெருக்கடி ஆகியவற்றுக்கு பிறகு ஒரு நல்ல வெளிச்சமாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த அலங்கார விளக்கை செய்தேன். இந்த விளக்கு ஒளி நமக்கு ஒரு நல்ல நம்பிக்கையை தரும்" எனக் கூறியுள்ளார். 


மருத்துவமனையின் இந்த முகநூல் பதிவு கடந்த 2ஆம் தேதி போட்டப்பட்டுள்ளது. அன்று முதல் தற்போது வரை சுமார் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பதிவை பகிர்ந்துள்ளனர்.  அத்துடன் இந்த செவிலியரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நெருக்கடி நிறைந்த இந்த காலத்தில் இந்த விளக்கு ஒளி உலகெங்கும் நம்பிக்கையை பரப்பட்டும் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க:இவ்வளவு நேரமா? நெடுஞ்சாலை திறப்புக்கு ஜனாதிபதிக்காக காத்திருந்த ரிப்பனை வெட்டிய சிறுவன்!