நாஜிக்களை எதிர்த்து சண்டையிடுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
நாஜி கொள்கையை மேன்மைப்படுத்துவதற்கு எதிராக சண்டையிடுவது தொடர்பான வரைவு தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூன்றாவது கமிட்டி வரைவு தீர்மானத்தை ஏற்று கொண்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 105 உறுப்பு நாடுகளும் எதிராக 52 உறுப்பு நாடுகளும் வாக்களித்தன. 15 நாடுகள் புறக்கணித்தன.
பழங்குடியின மக்களின் உரிமைகள், டிஜிட்டல் யுகத்தில் தனியுரிமை, நாசிசத்தை மகிமைப்படுத்துவதை கண்டிப்பது உட்பட எட்டு வரைவுத் தீர்மானங்களுக்கு குழு ஒப்புதல் அளித்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய இந்திய பிரதிநிதி, "பழங்குடி மக்கள் என்ற கருத்து நாட்டு சூழலுக்கு பொருந்தாது. இந்த புரிதலுடனே தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்" என்றார்.
மனித உரிமைகள், கல்வியறிவு, பாலியல் சுரண்டலில் இருந்து குழந்தைகளை காப்பது, குற்றங்களை தடுப்பது, நீதித்துறை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து வரைவு தீர்மானங்கள் பேசியிருந்தன.
நாஜி இயக்கம், நவ நாசிசம், நாஜியின் கீழ் இயங்கிய வாஃபென் எஸ்.எஸ் அமைப்பு, தற்போது நாஜியின் பழங்காலத்தை சிலாகித்து எழுப்பப்படும் நினைவுச்சின்னங்கள், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவை குறித்து தீர்மானத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனவெறி மற்றும் இனவெறி சொல்லாடல்களின் பயன்பாடு அதிகரிப்பு, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை நாடு கடத்துவதற்கான அழைப்புகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு, ஆப்பிரிகர்களுக்கு எதிரான போக்கு மற்றும் யூத விரோதம் உள்ளிட்டவை குறித்து ரஷிய கூட்டமைப்பின் பிரதிநிதி கவலை தெரிவித்திருந்தார்.
உக்ரேனுக்கு எதிரான அதன் மிருகத்தனமான போரை நியாயப்படுத்த, நவ நாசிசத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான சாக்குப்போக்கைப் பயன்படுத்திக் கொள்ளும் ரஷியாவின் முயற்சியைப் பற்றி பல உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்தன. நாசிசம் மற்றும் நவ-நாசிசத்திற்கு எதிரான உண்மையான போராட்டம் தொடர்பாக வரைவு தீர்மானத்தில் எதுவும் இல்லை என உக்ரேனின் பிரதிநிதி விமர்சித்துள்ளார்.
உக்ரைன் பிரதிநிதியின் கருத்தை எதிரொலித்த அமெரிக்க பிரதிநிதி, "ஹோலோகாஸ்ட் மற்றும் இரண்டாம் உலகப் போரைத் தூண்டுவதன் மூலம் ரஷியாவின் புவிசார் அரசியல் நோக்கங்களை மேம்படுத்துவதற்கான ஒரு இழிந்த முயற்சிதான் இந்த தீர்மானம்" என்றார்.