இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ள நிலையில், கொழும்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்தார்.
பின்னர், பேசிய அவர், இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
இதையடுத்து, இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜூலை 20 ஆம் தேதிக்குள் புதிய அதிபரை தேர்வு செய்யுமாறு இலங்கைக்கு இந்திய தூதர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியத் தூதுவர் இன்று காலை சபாநாயகரைச் சந்தித்தார். குறிப்பாக இந்த முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் நாடாளுமன்றத்தின் பங்கை பாராட்டினார்.
இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்க, அமைச்சரவை, மூத்த அலுவலர்கள் என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை அரசியலமைப்பின் கீழ் ஜனநாயக வழிமுறைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியே குழு ஒன்று கூடி சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதேவேளை, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் ஜூலை 20ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீர்மானித்தபடி ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அதிபர் தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் அபேவர்தன வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்தப் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், ஜூலை 20 ஆம் தேதி அரசியலமைப்பில் உள்ள விதிகளின்படி வாக்களிப்பு நடைபெறும் என்றும் நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
விக்கிரமசிங்கவைத் தவிர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜே.வி.பி கட்சி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்