மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் சமீபத்தில்தான் ஆட்சி மாற்றம் நடந்தது. கடந்தாண்டு ஜூலை மாதம், புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். கோட்டபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் பதவி வகித்து வந்தார்.

Continues below advertisement


ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு முன்பாக அங்கு வரலாறு காணாத போராட்டம் நடந்தது. பொருளாதார நெருக்கடி பெரும் பிரச்சினையை கிளப்பிய நிலையில், அங்கு பயங்கர உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கூட அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் அதை வாங்க முடியாமல் எளிய மக்கள் சிரமத்தை சந்தித்தனர்.


இதன் விளைவாக வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் கொழும்புவில் நடந்த போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கே சென்று மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு மாணவர்கள், பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இறுதியில், அவசரநிலை கொண்டு வரப்பட்டு மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டது.


போராட்டம் முடிவுக்கு வந்த போதிலும் மக்கள் பிரச்சினை குறைந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்து.


இவர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகித்தனர்.கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காலி வீதி , கொள்ளுபிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. போலீசாரினால் பிரதான வீதி மறிக்கப்பட்டிருந்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மெரைன் டிரைவ் வீதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யூனியன் ப்ளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையே, தைப்பொங்கல் விழாவையொட்டி, யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று பங்கேற்றார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக யாழ்ப்பாணம் சென்ற அவர்,  தமிழ் கலாச்சார முறைப்படி ஊர்வலமாக  அழைத்துச் செல்லப்பட்டார். 


தொடர்ந்து, இந்து சமய முறைப்படி  வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது,  வண்ணமயமான  தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.


இதனிடையே தங்கள் பகுதிக்கு அதிபர் வந்து இருப்பதை அறிந்து, பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு குவிந்தனர். போரின் போது காணாமல் போனவர்களை மீட்டு தருவது, ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நிலங்களை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.


இதுதொடர்பாக அதிபரிடம் வலியுறுத்த, பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் நுழைய முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.


பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காததால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நிலவிய சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டம் கலைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.