அந்நிய செலாவணி வீழ்ச்சி:


இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசம் அடைந்து செல்லும் நிலையில் அந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கக்கூடிய துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, இலங்கையின் உற்பத்தி துறையில் பெருமளவு வருமானத்தை ஈட்டி கொடுக்க கூடிய துறை தேயிலை துறையாகும். இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டு இருப்பதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார்  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


எரிபொருள்  வீழ்ச்சி  :


இலங்கையில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் தேயிலை உற்பத்தி செய்யப்படும் மலைப் பிரதேசங்களுக்கு வாகனங்கள் சென்று வருவதில்  சிக்கல் நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேயிலை தோட்டத்திலிருந்து தேயிலையை தொழிற்சாலைக்கு  கொண்டு செல்லவும் அங்கிருந்து , தேயிலை தூள் உற்பத்தி செய்யவும், செயலைத் தோட்டங்களில் சுற்றி நாள்தோறும் முறையான பராமரிப்பை மேற்கொள்ளவும்  டீசல் ,பெட்ரோல் என்பது அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இலங்கையில் சுமார் பத்து லட்சம் பேர் இந்த தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தேயிலை உற்பத்தி என்பது வீழ்ச்சி அடைந்தால் இலங்கைக்கான வருமானம் என்பது முற்று முழுதாக தடைபடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார்  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.




வேலை இழக்கும் அபாயம்:


இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் பல தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக, தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால், பெண் தோட்டத் தொழிலாளர்கள் அதிக அளவில் தற்போது அங்கு தேயிலை தோட்டங்களில் தங்கி வேலை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே இலங்கையில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடையும் பட்சத்தில் சுமார் பத்து லட்சம் பேர் தொழிலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.


இலங்கையில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகள்  அதாவது மலைப்பிரதேசமான தலவாக்கலை, கண்டி, ஹட்டன் , நுவரெலியா, பதுளை, பண்டாரவளை , போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் பகுதிகளில் மின்வெட்டு அதிகளவில் நிகழ்வதாக கூறப்படுகிறது. ஆகவே மின்வெட்டு நேரங்களில், இந்த எரிபொருட்களை நம்பித்தான் உற்பத்தி துறை அங்கு செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எரிபொருள் தேவை அங்கு அதிகமாக இருப்பதாகவும், தேயிலை கொழுந்து பறித்து ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தேவையான டீசலும் அங்கு அதிக அளவு தேவை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


மற்ற நாடுகளில் கொள்முதல்:


இலங்கை தேயிலையை  பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் விரும்பி கொள்வளவு செய்கின்றன. இலங்கையின் தேயிலையை விரும்பி வாங்கும் வெளிநாடுகளின் மூலமாக சர்வதேச அளவில் இலங்கை தேயிலைக்கு நன்மதிப்பு உள்ளது. உலகளவில் தேயிலை உற்பத்தி துறையில்  சீனா ,இந்தியா, கென்யாவுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இலங்கை தேயிலை உற்பத்தி இடம் பெறுகிறது. இந்நிலையில்  இலங்கைக்கு வருமானம் ஈட்டி தரும் உற்பத்தி துறையான தேயிலைத் துறை வீழ்ச்சி அடையுமானால், இலங்கையிலிருந்து தேயிலையை பெற்றுக் கொள்ளும் சர்வதேச நாடுகள் , கென்யா, துருக்கி, இந்தோனேசியா, அர்ஜென்டினா, இந்தியா ,ஜப்பான், ஈரான், வியட்நாம், சீனா உள்ளிட்ட தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து கொள்வனவு செய்ய நேரிடும். இதனால் இலங்கையின் உற்பத்தி துறையில் பெரிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.


சுகாதாரம் கடுமையாக பாதிப்பு:


உலக உணவு திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி , இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தேயிலை ,தென்னை ,ரப்பர் போன்ற உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்களில் ஐந்தில் இரண்டு குடும்பங்கள், போதுமான உணவுகளை தற்போது உட்கொள்வதில்லை என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது. இலங்கையின் மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுக்காக தற்போது கடன் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கிறது. மலையகப் பகுதிகளில் தற்போது சுகாதாரம், மருந்து ,உணவு பாதுகாப்பு போன்ற விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலக உணவு நிறுவனம் தெரிவித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.