தனது கட்சிக்குள் இருந்து எழுந்த கலகக்குரல்களின் காரணமாக பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் போரிஸ் ஜான்சன். 


இந்நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம்... 


லிஸ் ட்ரூஸ்


பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரும், அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளருமான இவர், கட்சியினரின் ஆதரவைக் கொண்டிருப்பவர். தனக்கான இமேஜை கவனமாக வடிவமைத்து வந்த லிஸ் ட்ரூஸ் கடந்த ஆண்டு, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரும், பிரிட்டன் நாட்டின் முதல் பெண் பிரதமருமான மார்கரேட் தாட்சரின் பிரபலமான 1986ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பீரங்கி புகைப்படத்தைப் போலவே படம் எடுத்து வெளியிட்டவர். தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை எதிர்த்த இவர், பொது வாக்கெடுப்புக்குப் பிறகு மனதை மாற்றிக் கொண்டதாக அறிவித்தார்.  



ஜெரெமி ஹண்ட்


முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பதவியின் அனுபவத்திறமையை நாடாளுமன்றத்தின் சுகாதாரத்துறையில் செலவிட்ட இவர், போரிஸ் ஜான்சன் அரசிற்கு ஏற்பட்ட களங்கத்தில் சிக்காதவர். தனக்கு பிரதமராகும் ஆசை முற்றிலுமாக தீர்ந்து போகவில்லை எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்த இவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புபவர். 



பென் வாலஸ்


பாதுகாப்புத்துறை அமைச்சரான பென் வாலஸ் கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் விவகாரம் காரணமாக மிகவும் பிரபலமானவராக கருதப்படுகிறார். கடந்த 1992ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தின் மீது தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த ஐரிஷ் குடியரசுப் படையினரைப் பிடித்த ராணுவத் தளபதியாக செயல்பட்டவர் இவர். பொது வாக்கெடுப்புக்குப் பிறகும், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தவர். 



ரிஷி சுனாக்


நிதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்கும் இவர், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றியதற்காக போற்றப்படுகிறார். எனினும், மக்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு, அவரது மனைவியின் வரி ஏய்ப்பு விவகாரங்கள், கொரோனா காலத்தில் போரிஸ் ஜான்சனுடம் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது விதிக்கப்பட்ட அபராதம் முதலானவை அவருக்கு மைனஸ்களாக அமைந்துள்ளன. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தார். 



சாஜித் ஜாவித்


போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மக்களைத் தவறாக போரிஸ் ஜான்சன் வழிநடத்தினார் எனக் கூறி, பதவி விலகிய முதல் அமைச்சர் சாஜித் ஜாவித். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பிரதமர் தேர்தலில் நான்காவது இடம்பிடித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடித்தால் மட்டுமே பொருளாதாரச் சிக்கல்களைத் தாக்குப்பிடிக்க முடியும் எனக் கூறி, தொடர்ந்து அதில் `கனத்த மனதோடு’ நீடிக்க விரும்புவதாக கூறியவர் சாஜித் ஜாவித். 



இவர்கள் மட்டுமல்லாமல், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நிதியமைச்சர் நதிம் ஸஹாவி, முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் பென்னி மோர்டவுண்ட், நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை கமிட்டி தலைவர் டாம் டுகெந்தாட், வழக்கறிஞர் ஜெனரல் சுவெல்லா ப்ரேவர்மேன் முதலானோர் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர். 


இவர்களுள் யார் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என்பது விரைவில் தெரிய வரும்.