சீன உளவுக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவுடன் எந்த முரண்பாடும் ஏற்படவில்லை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொறகொட தெரிவித்து இருக்கிறார். கடந்த நான்கு வருடங்களில் இலங்கைக்கு இவ்வாறு பத்து ஆராய்ச்சி கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


யுவான் வாங் 5 என்ற சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நாட்களுக்கு பின்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் இந்த கருத்தினை முன் வைத்துள்ளார்.


இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச காலத்தில் தான் இந்த சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொறகொட  கூறியுள்ளார். சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட போது பிராந்திய நாடுகள் என்ற வகையில் உரிய  நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என இந்தியாவுக்கான தூதர் சுட்டிக்காட்டி உள்ளார். இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் எனவும் ,அனுமதி வழங்கிய பிறகு அதை திரும்ப பெறுவது மிகவும் கடினமான விசயம் எனவும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவுக்கான இலங்கை தூதர் உறுதி அளித்திருக்கிறார். உரிய நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை சீர்குலையும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கப்பல் விவகாரத்தில் நடைமுறை சிக்கல் குறித்து இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் ,இதன் வருகை குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற உண்மையையும் அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு இவ்வாறான 10 ஆராய்ச்சி கப்பல்கள், இந்தியாவிற்கு எந்த வகை பிரச்சனையும் ஏற்படாத வகையில் வந்து சென்றிருப்பதாகவும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்திருக்கிறார். அதே நடைமுறைதான் இந்த சீன உளவு கப்பல் விவகாரத்திலும் பின்பற்றப்பட்டு இருப்பதாக இலங்கை தூதர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார குழப்ப நிலைக்கு இடையில் , சீன கப்பல் வகைகள் அல்லது தொழில்நுட்ப தகவல் குறித்த  வேறுபாட்டைக் கண்டறிவதில் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கலாம் என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். குறிப்பாக பொருளாதார மற்றும் இவ்வாறான துறைகளில் இந்திய , இலங்கை ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்தியாவிடமிருந்து கடன் வசதிகள் உள்ளிட்ட 3.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் மேலதிகமாக இந்தியா மற்றும் கொழும்பிற்கு இடையிலான வர்த்தக உறவு, வலுசக்தி பகிர்விற்கான வலையமைப்பு,  எண்ணெய் சேமிப்பு உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்திருக்கிறார்.
 இந்தியாவும் இலங்கையும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் அழைப்பு விடுத்துள்ளார். சீன கப்பலுக்கு அனுமதி  அனுமதி அளித்தது பெரிய அளவிலான பிரச்சனை தான் எனக் கூறியுள்ள அவர் எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்