Sri Lanka presidential Election 2024: இலங்கை அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகனுமான  நமல் ராஜபக்சவின் குடும்பம் நேற்றைய தினம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை அதிபர் தேர்தல்:


இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தலானது மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து, இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் . இதனால், நாளை காலையோ அல்லது மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


வேட்பாளர்கள்


இலங்கை தேர்தலைப் பொறுத்தமட்டில், 39 பேர் போட்டியிட்டாலும் ( 38+1 ) ஒருவர் காலமாகிவிட்டார் , 4 பேர்தான் மிகவும் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.


தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சுயேச்சையாக இம்முறை களத்தில் இறங்கியுள்ளார்.


இரண்டாவது பெரும் போட்டியாளர் என்றால் அது சஜித் பிரேமதாஸ, எஸ்.ஜே.பி ( Samagi Jana Balawagaya) கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ளார்.


3-வது பெரும் வேட்பாளர் என்றால் அது ஜே.வி.பி ( Janatha Vimukthi Peramuna) கட்சியின் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள அனுர குமாரா திஸநாயக களத்தில் உள்ளார்.


4-வது பெரிய வேட்பாளர் என்றால், அது முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன், நமல் ராஜபக்ச.


இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக ஆகியோருக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராஜபக்ச குடும்பம்:


முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச  குடும்பத்தின் மீது அம்மக்கள் கோபத்தில் இருப்பதால், அவரது மகன் நமல் வேட்பாளராக களமிறங்கினாலும் சாதகமான சூழ்நிலை இல்லாத நிலை நிலவுவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தேர்தலில் நிற்கவில்லை என்றால் , தேர்தல் அரசியலை விட்டு ஒதுங்கி விட்டதாக கருதப்படும் நிலை ஏற்பட்டு விடும் என்றும், அதன் காரணமாக தோல்வி ஏற்படும் என தெரிந்தும் தம்முடைய எஸ்.எல்.பி.பி. (SriLanka  Podujana Peramuna) கட்சியின் இருப்பை காண்பிக்கும்  வகையிலே போட்டியிடுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


வெளிநாடு பயணம்.?


இந்த தருணத்தில் , நமல் ராஜ்பக்சவின் மாமியார் , இரண்டு பிள்ளைகள், இரண்டு பணி பெண்கள் மற்றும் உறவு பெண் ஆகியோர் நேற்று இலங்கையை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள், நேற்று துபாய் சென்று விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.


இன்று அதிபர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில், அதிபர் வேட்பாளர் குடும்பத்தினர் வாக்களிக்காமல் வெளிநாடு சென்றுள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.