மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் புதிய அதிபராக இன்று ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


கோட்டபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் பதவி வகித்து வந்தார். 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை உடைய இலங்கை பொதுஜன பெரமுன கூட்டணி ரணிலுக்கு ஆதரவு அளித்திருந்தது. இதையடுத்து, இலங்கை பிரதமராக ஆறு முறை பதவி வகித்த ரணில், முக்கிய வேட்பாளராக  போட்டியில் குதித்தார்.


73 வயதான ரணில், ராஜபக்சவுக்கு நெருக்கமாக பார்க்கப்பட்டதால் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சூழலில், அவர்  போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


இதனிடயே, இடைக்கால அதிபராக பதவி வகித்த ரணில், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கியது. அதிபரின் இல்லத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


நாடாளுமன்றத்தில் அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக ரணில் கடுமையான நிலைபாட்டை கொண்டிருப்பதால், எம்பிக்களுக்கு மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகி இருப்பதாக எதிர்கட்சி எம்பி ஒருவர் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எம்பிக்கள் ஒருவர் பின் ஒருவராக வாக்களித்தனர். மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 2 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குகள் எண்ண தொடங்கப்பட்டதிலிருந்தே ரணில் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.


இறுதியாக, ரணிலுக்கு 134 வாக்குகள் கிடைத்தாகவும் டலஸ் அழகபெருமவுக்கு 82 வாக்குகள் கிடைத்தாகவும் அனுரகுமார திசாநாயக்கவுக்கு மூன்று வாக்குகள் கிடைத்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இதன் மூலம், இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோட்டபய ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தார். இவரின் பதவிகாலம் 2024ஆம் ஆண்டு வரை இருப்பதால், ரணில் 2024 ஆண்டு ஆண்டு வரை அதிபராக நீடிப்பார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண