ராஜினாமா:


இலங்கையில், மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த  நிலையில், கோட்டபய ராஜபக்ச, அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற கோட்டபய ராஜபக்ச, பதவி விலகுவதாக கடிதம் அளித்துள்ளதாக, இலங்கை சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


பொருளாதார நெருக்கடி:


இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து, அங்கு பணவீக்கம் அதிகரித்தது. அதனால அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால் மற்றும் அரிசியின் விலையும் பல மடங்கு அதிகரித்தன. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையால், பல்வேறு தொழில்களும் முடங்கி, பணவீக்கத்திற்கும் வழி வகுத்தது. இதனால் இலங்கை மக்கள் 70 சதவீதத்திற்கும் மேலான மக்கள் உணவு உட்கொள்ளுவதை குறைத்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


வெடித்த போராட்டம்:


இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு, இலங்கை அரசின் ஆட்சி முறைதான் காரணம் என கூறி, அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் பொதுமக்கள், இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அப்போது கோட்டபய ராஜபக்ச தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நேரத்தில் ஜூலை 13 ஆம் தேதி, கோட்டபய பதவி விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால் அன்றும் பதவி விலகவில்லை. இதனால் போராட்டம் மேலும் தொடர்ந்தது.




தப்பி ஓட்டம்:


இந்நிலையில் நேற்று காலை, கோட்டபய மாலத்தீவுக்குச் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அங்கும் கோட்டபயவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இன்று சவுதி ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூருக்குச் சென்றடைந்தார். 




ராஜினாமா கடிதம்:


சிங்கப்பூர் வந்துள்ள கோட்டபய ராஜபக்ச அடைக்கலமும் கேட்கவில்லை; நாங்கள் அடைக்கலமும் கொடுக்கவில்லை என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தெரிவித்தது. இந்நிலையில் கோட்டபய ராஜபக்ச, தனது அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக இலங்கை பாராளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். ராஜினாமா கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் அனுப்பியுள்ள நிலையில், கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக, அதிபர் பதவியிலிருந்து விலகியதாக அறிவிக்கப்படும். ஏற்கனவே, கோட்டபய ராஜினாமா கடிதம் அளிக்கும் பட்சத்தில், ஜீலை 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என சபாநாயகர் கூறியது குறிப்பிடத்தக்கது