தனக்கு கிடைத்திருப்பது பதவி அல்ல பொறுப்பு என்றும் நூற்றாண்டு கனவு நிறைவேறியுள்ளதாகவும் இலங்கை அதிபர் தேர்தலில் வென்ற அனுரா குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், இலங்கையின் 9ஆவது அதிபராக அனுரா குமார திசாநாயக்க பதவியேற்க உள்ளார்.

"நூற்றாண்டு கனவு நனவானது"

Continues below advertisement

வெற்றி பெற்றதை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "பல நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை குறிப்பிட்ட தனி நபரின் உழைப்பால் நடந்தது அல்ல. ஆனால், லட்சக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சியால் நடந்துள்ளது.

உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. ஒரே நோக்கத்திற்காக தங்கள் வியர்வையையும், கண்ணீரையும், தங்கள் வாழ்க்கையையும் அர்ப்பணித்த பலரின் தியாகத்தால் எங்கள் பயணம் செதுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் தியாகங்களை மறக்கவில்லை. அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களால் கிடைத்த செங்கோலை அதன் பொறுப்பை அறிந்தே தாங்குகிறோம்.  நம்பிக்கையினாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக்கான கண்கள் எம்மை முன்னோக்கித் தள்ளுகின்றன.

"சிங்களவர்கள், தமிழர்களின் ஒற்றுமை" 

ஒன்றிணைந்து இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம். இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்.

 

நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். நாம் ஒன்றாக இணைந்து இந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்" என பதிவிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளரிடம் பேசிய திசாநாயக்க, "தனக்கு கிடைத்திருப்பது பதவி அல்ல பொறுப்பு" என கூறியுள்ளார்.