பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை பேண விரும்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய - பாகிஸ்தான் உறவு: வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது.
பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங் பேசியது என்ன? ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், "நமக்கு கொள்கை இருக்கிறது. நாம் நிம்மதியாக வாழ வேண்டுமானால், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும்.
பாகிஸ்தான் உள்பட அண்டை நாடுகளுடன் கூட நல்ல உறவை பேண விரும்புகிறோம். ஆனால் அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் தீவிரவாதத்தை அதிகரித்துக் கொண்டே இருப்பதும், அவர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்வதும் எப்படி நடக்கும்?
இந்திய மண்ணில் பயங்கரவாதத்தை ஏவிவிட மாட்டோம் என்று அவர்கள் உத்தரவாதம் அளித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்" என்றார்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. வரும் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.